1907.

     ஆழி விடையீர் திருவொற்றி
          யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
     வீழி யதனிற் படிக்காசு
          வேண்டி யளித்தீ ராமென்றேன்
     வீழி யதனிற் படிக்காசு
          வேண்டா தளித்தா யளவொன்றை
     யேழி லகற்றி யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூர்க்கண் இருந்தருளும் பிச்சைத் தேவரே, சக்கரப்படையை யேந்தும் திருமாலை விடையாகவுடைய நீர் திருவீழிமிழலையில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவர்க்கும் கால நிலைமையால் வருத்தமின்றி மகிழவேண்டி, நீர் தாமே விரும்பிப் படிக்காசு தந்தீரன்றோ என்று பாராட்டினேனாக, வீழிக்கனி போன்ற வாயிதழால் நிலவுலகின் எழிலை நீக்கி வேண்டாத காமமாகிய குற்றத்தை யளித்து வருத்துகிறாய் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     ஆழி யென்றது அதனை யேந்தும் திருமாலுக்காயிற்று. திருமால் விடையாய் உருக்கொண்டு சிவனைத் தாங்கினார் என்ற புராண வரலாற்றைக் கருத்திற்கொண்டு, “ஆழிவிடையீர்” என்று உரைக்கிறாள். இருவர் என்றது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரை. இருவரும் திருவீழி மிழலைக்குச் சென்று சிவனைத் திருப்பதியம் பாடி வழிபட்டிருக்கையில், வற்கடம் (பஞ்சம்) தோன்றி மக்களை வருத்தவே, சிவபெருமான், “கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும், ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்றும்” இருவர்க்கும் நாடறியப் படிக்காசு தந்தார் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. வற்கடத்தால் இருவரும் மனம் வாடிச் சிவனை வேண்டாதிருக்கவும், அவர் தாமே விரும்பி அளித்ததை “உங்கள் கருத்தில் வாட்டம் உறீர்” என்பதனால் அறிகிறோம்.. “திருமிழலையிலிருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர், அருந்தண் வீழிகொண்டீர்” (வீழி) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகின்றார்கள். வீழி, இக்காலத்து விழுதியென வழங்கும். “வீழிவாயின் கனிவாய் ஒரு மெல்லியல்” என்பர் கம்பர். வீழியைக் கோவைக்கொரு பெயராய்க் கொண்டு, அதன் கனியை இளமகளிரின் வாழிதழுக்குவமம் செய்வதுண்டு. வீழிபோலும் வாயிதழின் தோற்றமும் சொல்லும், மக்கள் உள்ளத்தில் காமவிச்சையைத் தூண்டி, வாழ்வாங்கு வாழ்தற்குரிய நெறி பிறழ்ந்து துன்பத்தில் தோய்விப்பதுபற்றி “வீழியதனின் படிக்கு ஆசு அளித்தாய்” என்று கூறுகின்றார். படி - நிலவுலகம். ஆசு - குற்றம். வாழ்வின் செம்மை நிலை எழிலாதலால், அதனை காமவிச்சை அழிப்பது பற்றி, “அளவொன்றை எழில் அகற்று ஆசளித்தாய்” என இசையும். அளவாகிய ஒரு மாத்திரை யகன்றால் ஏழில் எழில் ஆகும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானவாழ்வு பெறுதற்கு அமைந்த உயிர் காமவேட்கையை வேண்டாதிருக்கவும், மகளிர் விழிவாய் அதனை நல்குவது கொண்டு, “ஆசு வேண்டாதளித்தாய்” என விளம்புகின்றார்.

     இதன்கண், இருவர்க்குப் படிக்காசு வேண்டியளித்தீர் என்றாட்கு, நீ படிக்கு எழிலகற்றி ஆசு வேண்டா தளித்தாய்” என வுரைத்தாராவது.

     (136)