1908.

     உற்ற விடத்தே பெருந்துணையா
          மொற்றிப் பெருமா னும்புகழைக்
     கற்ற விடத்தே முக்கனியுங்
          கரும்பு மமுதுங் கயவாவோ
     மற்ற விடச்சீ ரென்னென்றேன்
          மற்றை யுபய விடமுமுத
     லெற்ற விடமே யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; ஊறு நேர்ந்த போதெல்லாம் பெருந்துணை புரியும் திருவொற்றியூர்ப் பெருமானாகிய நும்மிடத்துப் புகழைக் கற்ற போது முக்கனியும் கரும்பின் சாறும் அமுதும் கைப்பனவாம் ஆயின், மற்றைத் தேவர்களிடத்துப் புகழ்கள் என்னாம் என்று கேட்டேனாக; மற்ற உபயவிடமும் முதல் கெட்ட விடமாம் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     உற்றவிடம் - இடுக்கண் உண்டான இடம். கற்றவர்க்கு இறைவன் புகழ் இன்சுவை நல்கும் பொருள்கள் அனைத்தினும் மேம்பட்டு விளங்குவது கொண்டு, “நும்புகழைக் கற்றவிடத்து முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ” என்று இயம்புகிறாள். புகழை நோக்க, முக்கனி முதலிய சுவையாற் பிற்பட்டுக் கசப்பனவாம் என்று பொருள்படுதலின் ஓகாரம் எதிர்மறை. கயத்தல் - கசத்தல்; பசத்தல் - பயத்தல் என வருதல் போலக் கசத்தல் கயத்தல் என வரும் என்க. மற்றவிடம். மற்றைத் தேவர்களைக் குறிக்கிறது. மக்களது புகழ்க்கு நிலவுலகு ஆதாரமாம்; தேவர்களின் புகழ் அவர்களையே ஆதாரமாகக் கொண்டதெனக் கொள்க. உபயவிடம் என்பதன் முதல் எழுத்தான உகரத்தை நீக்க, நிற்கும் பயவிடம் என்றற்கு “உபயவிடமும் முதல் எற்ற விடமே” என்று இசைக்கின்றார். பயவிடம் - பால் போலும் விடம்; “பால் ஆகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ஆலால விடம்”, மற்ற விடச்சீர்கள், பொருள் சேர் புகழல்ல; புகழ் போலத் தோன்றி அருட் பயன் தாரா என்பதாம்.

     இதன்கண், நும் புகழைக் கற்றவிடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயப்பனவாம் என்னின் மற்ற விடச்சீர் என்னாம் என்றாட்கு, உபயவிடத்து முதலெழுத்து எற்றவிடம் என இசைக்கின்றார் என்பதாம்.

     (137)