1909. யான்செய் தவத்தின் பெரும்பயனே
யென்னா ரமுதே யென்றுணையே
வான்செ யரசே திருவொற்றி
வள்ளால் வந்த தென்னென்றேன்
மான்செய் விழிப்பெண் ணேநீயாண்
வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
தேன்கண் டிடவே யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; முன்னைப் பிறவிகளில் யான் செய்த தவத்தின் கண் திரண்ட பெரும் பயனே, எனது அரிய அமுதமானவனே, எனக்குத் துணையே, வானுலகும் யாவும் ஆளும் அரசே, மண்ணகத்தில் திருவொற்றியூரில் இருந்தருளும் வள்ளலே, என் மனை நோக்கி வந்த காரணம் என்னையோ என்று கேட்டேனாக, மான் போன்ற விழிகளையுடைய பெண்ணே, நீ ஆண் வடிவுக்குரிய பெயர் எய்தியது கேட்டு உள்ளம் வியந்து கண்டிடவே வந்தேன் என்று இயம்புகின்றார்; இது தான் என்னே. எ.று.
செய்தவம் - ஈண்டு இறந்த காலம் தொக்க வினைத்தொகை; தவப்பயன் யாவும் திரண்டு பெருகிச சிவமாய் விளங்குகிறதென்றும் கருத்துப்பட நிற்றலின், “யான் செய் தவத்தின் பெரும்பயன் என்று கூறுகின்றார். ஞானாமுதமாய்ப் பருக நிற்ப, ஞானவொளி தந்து நன்னெறி செலச் செய்தல் விளங்க “என் துணையே” என்றும், மண்ணுக்கேயன்றி விண்ணுக்கும் வேந்தென்பது பற்றி “வான்செய் அரசே” என்றும் இயம்புகின்றார். “எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் என்பெருமான்” (பிரம) என்று ஞானசம்பந்தர் உரைப்பர். “மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி” (நாகை) எனச் சுந்தரர் கூறுவது காண்க. ஒற்றியூரிற் சிவபெருமானுக்குத் தியாகர் என்ற திருப்பெயர் உண்மைபற்றி “வள்ளால்” எனச் சிறப்பிக்கின்றார். பலிவேண்டி நின்றவர் வேறே உரையாடும் கருத்துடையார் போல நின்றமையின், பலியிடும் நங்கை, “வந்தது என்” என்று கேட்டாள். அவளுடைய கண்பார்வை அவர்பால் அவட்கிருக்கும் அன்பினை வெளிப்படுத்தக் கண்டு, மான் போன்ற விழிகளையுடைய நீ ஆண்பாற் பெயர்க்குரிய நம்பி என்பது கொண்டு விளங்குவது எனக்கு வியப்பைத் தந்தது என்பராய், “மான்செய் விழிப் பெண்ணே, நீ ஆண் வடிவானது கேட்டு உள்ளம் வியந்தேன் கண்டிடவே” என வுரைக்கின்றார். ஆண் வடிவானது, ஆண்பாற்குரிய நம்பி என்பதைக் கொண்டது. என்னை நீ நம்பியது கேட்டு உள்ளம் வியந்து கண்டிட வந்தேன்” என்றாராம். நம்பியென்ற ஆண்பாற் பெயரும், நங்கையென்ற பெண்பாற்பெயரும் தொல்காப்பியம் விதந்தெடுத்து ஓதும் உயர்திணை ஆண்பால் பெண்பால் பெயர்கள். இவற்றைத் தொல்காப்பியம் “நம்மூர்ந்து வரூஉம் இகர வைகாரம்” என்று இசைக்கிறது.
இதன்கண், வந்தது என்னென்றாட்கு, நீ என்னை நம்பியது கேட்டு வியந்து கண்டிட வந்தேன் என்றாராம். (138)
|