12. பொறுக்காப் பத்து

        தகவில்லாதவர்பாற் சென்று வேண்டுவன பெற வரும் நிலைமையைப் பொறாமல் தணிகைச் சரவண பவனான முருகன்பால் முறையிடுவது இப்பத்தின் கருத்தாதல் கண்டு “பொறுக்காப் பத்து” என்று பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. பொறாமைப் பத்து என்னலாமாயினும் அதன் பால் நயமின்மை நோக்கியும் எளிமை கருதியும் இப்பெயர் எய்தியது எனக் கொள்க.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

191.

    மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
        விரைமலர்த் துணைதமை விரும்பாப்
    பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
        பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
        அளித்திடும் தெள்ளிய வமுதே
    தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
        தணிகை வாழ் சரவண பவனே.

உரை:

     திருத்தணிகைப் பதியில் எழுந்தருளும் சரவண பவனே, ஐயனாகிய சிவபிரானும் அவற் கிடப்பால் அமரும் உமையம்மையும் தேவர்களுற்ற இடுக்கணுக்கு வருந்திப் பெற்று வளர்த்த தெளிந்து அமுது போன்ற முருகப் பெருமானே, மெய் யன்புடைய பெருமக்கள் மனத்தின் கண் ஒளிரும் நின்னுடைய திருவடியாகிய ஞான மணம் கமழும் பூப்போன்ற இரண்டையும் விரும்புதல் இல்லாத பொய் யொழுக்க முடைய கீழ் மக்களிடத்தில் அடியவனாகிய யான் ஒன்று வேண்டிச் செல்லும் நிலைமை யுண்டாவதைச் சிறிதும் பொறுக்க முடியாதவனாகின்றேன்; என்ன செய்வது? எ. று.

     சரவண பவன் என்பது முருகனைக் குறிக்கும் திருப் பெயர்களில் ஒன்று; சரவணப் பொய்கையில் தோன்றியவன் என்பது பொருள். சரவணபவ என்பதை ஆறெழுத்து மந்திரமாகக் கொள்வதுண்டு. ஐயர் - தலைவர்; ஈண்டுச் சிவபெருமான் மேற்று. சிவனது இடப்பாகத்தில் பிரிவின்றிக் கூறுகொண்டமை பற்றி, உமாதேவியை “இடப்பால் அம்மை” எனக் கூறுகின்றார். மண்ணக மக்களைப் போல வருந்திப் பெறாராயினும், அசுரரால் துன்புற்று வருந்திய தேவர்களின் துன்பம் கண்டு வருந்தி முருகனை ஈன்று புறந் தந்தனர் என்ற புராணச் செய்தியைக் கருத்திற் கொண்டு மொழிதலால், “ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே” என்று பரவுகின்றார். திருவருள் ஞான வடிவினனாதலால் முருகனாகிய குழவியைத் “தெள்ளிய அமுதே” எனச் சிறப்பிக்கின்றார். தையலர் - எப்போதும் ஒப்பனை செய்து கொண்டுறையும் பொது மகளிர். குல மகளிர் கணவனில்லாத போது ஒப்பனையில் மனம் செலுத்தார் என அறிக. பொது மகளிர் மயக்கில் அகப்படாத நன்மக்களைத் “தையலர் மயக்கற்றவர்” எனவும், அவர் மனம் முருகன் திருவடிக்கண் படிந்து கிடத்தலால், திருவருள் நிறைந்தவராதலால் “மயக்கற்றவர்க்கு அருள் பொருளே” எனவும் புகழ்கின்றார். மெய்ம்மை சான்ற ஞானவான்களின் திருவுளத்தில் ஞானவொளி செய்வதால், “மெய்யர் உள்ளகத்தில் விளங்கும் நின்பதம்” என்றும், பூவின் வண்ணமும் பொற்பும் உடையதாய் ஞான மணம் கமழ நிற்றலால், “விரை மலர்த் துணை” என்றும் இயம்புகின்றார். விரும்புவார் போன்று விரும்பாது ஒழுகுவோரைப் “பொய்யர்” எனவும், அவர் பாற் சென்று ஒன்று வேண்டுவது ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் விளைவித்து உள்ள வூக்கத்தைக் கெடுப்பது பற்றி, “விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன்” எனவும் உரைக்கின்றார். திருவடியை மனத்திற் கொண்டுறையும் யான் புகுவது திருவடி நினைவை மாசு செய்தலாற் பொறுத்தல் அரிதாகிறது என்பதை வற்புறுத்தற்குப் “பொறுக்கிலன் பொறுக்கிலன்” என அடுக்கி யுரைக்கின்றார். கண்டாய், முன்னிலை யசை.

     இதனால் ஒன்று வேண்டிப் பொய்யர்பாற் செல்லும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாமை கூறியவாறு.

     (1)