1910. கருணைக் கடலே யென்னிரண்டு
கண்ணே முக்கட் கரும்பேசெவ்
வருணப் பொருப்பே வளரெற்றி
வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
தருணப் பருவ மிஃதென்றேன்
றவிரன் றெனக்காட் டியதுன்ற
னிருணச் சளக மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; அருட்பெருக்கால் கடல் போன்றவனே, என்னுடைய இரண்டு கண் போன்றவனே, மூன்று கணுக்களையுடைய கரும்பு போல மூன்று கண்களையுடைய பெருமானே, சிவந்த நிறமுடைய மலையொப்பவனே, செல்வம் வளர்கின்ற திருவொற்றியூரில் உள்ள வள்ளலே, மாணிக்க மணியே, என்னை உவந்து சேர்தற்கு ஏற்ற இளமைப் பருவம் இதுவாகும் என்று சொன்னேனாக, பருவமன்று தவிர்க என்று இருள் போன்ற உனது கூந்தலே காட்டி விட்டது என மொழிகின்றார்; இதுதான் என்னே. எ.று.
கொளக் குறைபடாக் கடல்போலக் கொடுக்கக் குறையாத அருட் செல்வமுடைமை பற்றி இறைவனைக் “கருணைக் கடலே” என்றும், கண்ணிற் சிறந்த உறுப்பின்மையால் “என் இரண்டு கண்ணே” என்றும் புகழ்கின்றாள். கணுவைக் கண்ணென்பது கொண்டு “முக்கட் கரும்பே” என மொழிகின்றாள். சிவந்த நிறமுடையவனாதலால், “செவ்வருணப் பொருப்பு” என்கின்றார். வருணம் - நிறம். பொருப்பு - மலை. மணி - மாணிக்கமணி. வள்ளல் என்பதை மணிக்கு அடையாக்கி, வள்ளல்மணி என்றுகொண்டு, வளவிய மாணிக்கமணி என்றலும் ஒன்று. வடநூலார், ஆடவர்க்கெனப் பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்திகம் எனப் பருவம் கண்டது போல, மகளிர்க்கெனப் பருவம் நான்கு வகுத்து, பாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்பர். பிறந்து பதினாறு வயது வரைப் பாலைப்பருவம்; முப்பது வரை தருணி; ஐம்பதுவரை பிரவுடை; அதற்கு மேல் விருத்தை எனவாம். இங்கே தருணப்பருவம் என்றது, முப்பது வயது நின்ற காலம் சுட்டுதலின், அப்போது கூந்தல் நரைத்து முதுமை நிலை தோன்றுதலால், “மகிழ்ந்தணையத் தருணப்பருவம் இஃதன்று” என மறுத்து, அணைதற் கெழுந்த ஆசையை விடுக என்பாராய் “தவிர்” என்று உரைக்கின்றார். இருள் - நஞ்சு. அளகம் என்றவிடத்து, நச்சுதல் ஒப்புப் பொருளில் வந்ததாம். அளகம் - கூந்தல்.
இதன்கண், மகிழ்ந்தணையத் தருணப்பருவம் இஃது என்றாட்கு, அன்று, அணையவெழும் விருப்பம் தவிர் என மறுத்துரைக்கின்றமை புலப்படுத்தவாறாம். (139)
|