1911. காவிக் களங்கொள் கனியேயென்
கண்ணுண் மணியே யணியேயென்
னாவித் துணையே திருவொற்றி
யரசே யடைந்த தென்னென்றேன்
பூவிற் பொலியுங் குழலாய்நீ
பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
னீவைக் கருதி யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கருங்குவளைப் பூவைப் போன்ற கழுத்தையுடைய கனி போல்பவனே, என் கண்ணின் மணி நிகர்ப்பவனே, அணியாய் விளங்குபவனே, என் உயிர்த்துணையே, திருவொற்றியூர்க் கண் எழுந்தருளும் அருளரசே, என்பால் வந்த காரணம் என்னோ என்று வினவினேனாக, பூவால் அழகு திகழும் கூந்தலையுடையவளே, பொன்னால் உயர்ந்து விளங்குகின்றாய் எனக் கேள்வியுற்று, உனது ஈகையை விரும்பி வந்தேன் எனக் கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
காவி - குவளை; சிவபெருமானது நீல கண்டத்துக்கு ஒப்புக் கூறலாற் கருங்குவளை கொள்ளப்பட்டது. நினைக்கும் நெஞ்சினுக்கு இறைவன் அருள் அழகு செய்வது பற்றி “அணியே” என்றும், ஒன்றாயும் உடனாயும் உயிர்க்குத் துணை செய்தலின் “என் ஆவித்துணையே” என்றும் இசைக்கின்றார். மகளிர் கூந்தற்கு அழகும் மணமும் தருதலால் “பூவிற் பொலி குழலாய்” என்று புகழ்கின்றார். பொற்காசும் பொற்பணியும் மிகக் கொண்டு விளங்குகிறாய் என்பார், “பொன்னின் உயர்ந்தாய்” என்கின்றார்; பொன்னிறத் திதலையாற் பொலிந்து உயர்ந்தாய் என்றும் கூறுவதுண்டு. ஈவு - ஈகை; பொன், பொன் கருதி வந்தேன் என்பார் “ஈவைக் கருதி” என்கின்றார்.
இதன்கண், தேவரீர் என்னை அடைந்தது என் என்றாட்கு நீ பொன்னின் உயர்ந்தாய் எனக் கேட்டு ஈவைக் கருதி வந்தேன் என விடை கூறினாராம். (140)
|