1912.

     கண்ணும் மனமுங் களிக்குமெழிற்
          கண்மூன் றுடையீர் கலையுடையீர்
     நண்ணுந் திருவா ழொற்றியுளீர்
          நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
     வண்ண முடையாய் நின்றனைப்போன்
          மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
     வெண்ண வியப்பா மென்கின்றா
          ரிதுதான் சேடீ யென்னேடி.

உரை:

     கண்ணும் கருத்தும் மகிழ விளங்கும் அழகிய கண்கள் மூன்று உடையீர், கலைமானின் தோலை உடையாகக் கொண்டுள்ளீர், புண்ணிய முடையாரையே நண்ணும் திருமகள் உறையும் ஒற்றியூரில் இருப்பவரே, நீர் நடம்புரிவதில் வல்லவரன்றோ என்று கேட்டேனாக, அழகுடையவளே, உன்னைப் போல் நாநடனம் செய்ய வல்லவராவேமோ, இதனை எண்ணுமிடத்து வியப்பாம் என மொழிகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     காண்டற்கினிய தோற்றமும் கருத்திற்கினிய அருள் விளக்கமும் நல்குவது பற்றி, முக்கண் மூர்த்தியை, “கண்ணும் மனமும் களிக்கும் எழிற்கண் மூன்றுடையீர்” என்று இயம்புகின்றார். இடையறா அருட்பெருக் குடைமையால் “எழிற்கண்” என்றார். கண்ணிற்கழகு அருளுடைமை யென அறிக. மான் தோலை ஆடையாக வுடையனாதலின் “கலையுடையீர்” என்கின்றார். கலை - மான்; ஈண்டு மான் தோல் மேற்று. “புள்ளிமான் உரி உடையீர்” (ஓத்தூர்), “கலைபுனை மான்உரி தோல் உடை” (பாச்சி) என்று ஞானசம்பந்தரும், “மானைத்தோல் ஒன்றை யுடுத்து புலித்தோல் புயற்குமிட்டு, யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட் படோமே” (வேள்வி துருத்தி) என்று நம்பியாரூரரும் கூறுவர். புண்ணியமுடையாரை அறிந்து அடைதல் திருமகட்கியல்பாதலின் “நண்ணும் திரு” எனக் கூறுகின்றார். தில்லையம் பலத்தில் திருக்கூத்தாடும் பரனாதல் உலகறிந்த செய்தியாதலால், “நடஞ் செய்வல்லீர் நீர்” என நவில்கின்றாள். “செய்வல்லீர்” என்பதற்குச் செய்தலில் வல்லுநர் என்றலும் ஒன்று. வண்ணம் - அழகு. வண்ணமுடையாய் என்பதற்கு, அழகிய மேனியுடையாய் எனினும் அமையும். மலர்வாய் நடம், மலர்போலும் வாயிடத்தே நாவால் இனிமையுறப் பேசுதல். நாவாற் பாடுதல் பேசுதலாகிய செயல்களை நாவிளையாட்டெனலும் உண்டு. “காவிளையாடும் களிமயில் கடுப்ப, நாவிளையாடும் நற்றமிழ்க்கவி” (புலவராற்) என்று கவிராயர் பாடுவது காண்க. கணந்தோறும் வண்ணமும் மொழியும் மாறும் இயல்பினையுடைய நின் நடங்களை எண்ணுமிடத்து வியப்பு மேலிடுகிற தென்றற்கு “எண்ண வியப்பாம்” என்கின்றார்.

     இதன்கண், நீர் நடஞ்செய் வல்லீர் என்றாரட்கு, நினைப்போல் வாய் நடஞ்செய் வல்லோமே என்று பிச்சைத்தேவர் விடை வழங்கியவாறாம்.

     (141)