1913.

     தாங்கும் விடைமே லழகீரென்
          றன்னைக் கலந்துந் திருவொற்றி
     யோங்குந் தளியி லொளித்தீர்நீ
          ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
     வாங்கு நுதலாய் நீயுமெனை
          மருவிக் கலந்து மலர்த்தளியி
     லீங்கின் றொளித்தா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; உம்மைத் தாங்கிச் செல்வதாகிய காளைமேல் தோன்றும் அழகராகிய நீவிர், என்னைக் கலந்தும் திருவொற்றியூர்க்கண் உயர்ந்த கோயிலில் ஒளித்துத் கொண்டீராதலின், நீர் பிறர் அறியாவகை ஒளிப்பதில் வல்லராவீர் என்று சொன்னேனாக, வளைந்த நெற்றியை யுடையவளே, நீயும் என்னைக் கூடிக்கலந்தும் இங்கே இப்போது மலர்தலையுடைய அருட்கோயிலில் ஒளித்தாய் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     சுமந்து செல்லும் விடைமேற்கொண்டு காண்பார் கண்ணும் மனமும் கவரும் கவின்கொளத் தோன்றுதல்பற்றி “விடைமேல் அழகீர்” எனப்பரவுகின்றார். குதிரைமேல் இவர்ந்து காட்சி தரும் திருமாலை, “பரிமேல் அழகர்” எனக் காஞ்சிப் பதியினர் பாராட்டுகின்றமை நினைவு கூர்க. மனக்கண்ணிற் கண்டு இன்புறும் காட்சியைத் திருவொற்றியூர்க் கோயிலிடத்தே சிவலிங்க மூர்த்தமாகக் காண்கின்றாளாதலின், “என்றன்னைக் கலந்தும் திருவொற்றி ஓங்கும் தளியில் ஒளித்தீர்” என்றும், எனவே “நீர் ஒளிப்பில் வல்லராம்” என்றும் வினவினாள். நீர் ஒளிப்பில் என்றதற்கு 'நீர்க்குள் ஒளித்து' மறைவதெனக் கொண்டு, நீயும் என்னைக் கூடிக் கலந்தவிடத்தும் காட்சிப்படாமல் மலரிடத்தே தங்கும் நீர்த்துளிபோல எமது அருட்பெருஞ் சத்தியின்கண் ஒளிந்து ஒடுங்கியுள்ளாய் என்பாராய், “நீ எனை மருவிக்கலந்து இங்கு இன்று ஒளித்தாய்” என்று உரைக்கின்றார். உயிராகிய ஆன்மா சிவஞான வடிவுற்றுச் சிவத்திற் கலந்தபோது, அதற்குக் கோயிலாய் விரிந்து விளங்கும் அருள் ஒளியில் ஒடுங்கி வேறு காணப்படாமைபற்றி, “மருவிக் கலந்து மலர்த்தளியில் ஒளித்தாய்” என்று உரைக்கின்றார். சூரியனுக்கு அதனைச் சூழ்ந்தொளிரும் ஒளிக்கதிர் கோயிலாதல் போலச் சிவனுக்குக் கோயிலாவது அருட்சத்தியாகிய அருட்பெருஞ் சோதி; சிவத்தோடு கலக்கும் ஆன்மா சிவமாகி அவ்வருட்சோதியில் ஒன்றியுடனாம் என அறிக. சிவத்தை மருவிக் கலக்கும் ஆன்மா ஒடுங்கும் திறத்தைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சிவமெய்திய திறத்தைச் சேக்கிழார் உரைக்கும் நெறிபற்றி ஓர்ந்து கொள்க. அடுத்து வரும் பாட்டும் இக்கருத்தே அமைய விருத்தலைக் காணலாம். வாங்குதல் - பிறைபோல் வளைதல்.

     இதன்கண், நீர் ஒளிப்பில் வல்லீர் என்ற நங்கைக்கு, நீயும் எம்மை மருவிக்கலந்து மலர்த்தளியில் ஒன்றி ஒளித்தாய் என்றாராயிற்று.

     (142)