1914.

     அம்மை யடுத்த திருமேனி
          யழகீ ரொற்றி யணிநகரீ
     ரும்மை யடுத்தோர் மிகவாட்ட
          முறுத லழகோ வென்றுரைத்தேன்
     நம்மை யடுத்தாய் நமையடுத்தோர்
          நம்போ லுறுவ ரன்றெனிலே
     தெம்மை யடுத்த தென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; உமையம்மையை ஒரு பாகத்தே கொண்ட திருமேனி யமைந்த அழகரே, திருவொற்றியூரென்ற அழகிய நகரில் உள்ள தேவதேவரே, உம்மையடுத்த அன்பர்கள் மனத்தின்கண் மிகவும் வாட்டம் அடைவது அழகாகுமோ என்று சொன்னேனாக, நம்மை அன்பால் அடுத்தவளே, எம்மை அடுத்துள்ள அன்பர் அனைவரும் நம்போல் சிவானந்த ஞானவடிவம் பெறுவர்; அஃது அன்றாயின் எம்மையடுப்பதால் ஒரு பயனும் இல்லையாம் என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     அம்மை - உமாதேவி. உலகுயிர்கட்கெல்லாம் தாயாதலால் “அம்மை” எனப்படுகிறாள். ஒருபால் பெண்ணுருவும் ஒருபால் ஆணுருவும் அமையினும் திருமேனி அழகு மேம்படுவது கண்டு, “அம்மையடுத்த திருமேனி யழகீர்” என்று கூறுகிறாள். அணிநகர் - அழகிய நகரமென இக்காலத்து வழங்குவர்; முன்னை நாட்களில் நகர், கோயிலைக் குறித்தது. சிவனை நினைந்தும் அவன் திருப்பெயரை மொழிந்தும், அவன் திருவடிக்கும் திருவடித் தொண்டர்க்கும் பணிபுரிந்தும் வாழ்பவர் ஒருவகையிலும் வாட்டமுறார்; உறுதல் பொருந்தாது என்பது புலப்பட “மிகவாட்டம் உறுதல் அழகோ” என்று பலியிடும் நங்கை கேட்கின்றாள். உண்மைத் திருத்தொண்டர்க்குரிய அமைதி முற்றும் உற்று நீ நம்மை அடைந்தாய் என்பாராய், “நம்மை யடுத்தாய்” என்றும், அதனால் நம்மையடுத்தவர், சிறிதும் வாடுதல் இலராவர்; அதற்குக் காரணம் யாதெனில் அவர் நம்மைப் போல் நண்ணரிய சிவானந்த ஞானவடிவின ராகுவர் என்பாராய், “நமை யடுத்தோர் நம்போல் உறுவர்” எனக் கூறுகின்றவர். இல்லையாயின், நம்மையடுப்பதால் பயனின்றாம் என்று வற்புறுத்தலுற்று, “அன்றெனில் எம்மை அடுத்தது ஏது” என்று எடுத்து மொழிகின்றார்.

     இதன்கண், “அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ” என்று வினவினாட்கு, “நம்மை யடுத்தோர் நம்போல் உறுவர்; அன்றெனின் நம்மை அடுத்தது பயனில் செயலாம்” என்று கூறினாராம்.

     (143)