1915. உண்கண் மகிழ்வா லளிமிழற்று
மொற்றி நகரீ ரொருமூன்று
கண்க ளுடையீ ரென்காதல்
கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
பண்கொண் மொழியாய் நின்காதல்
பன்னாண் சுவைசெய் பழம்போலு
மெண்கொண் டிருந்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; உண்ணப்படும் தேனால் உண்டாகும் மயக்கத்தால் வண்டுகள் ஒலிசெய்யும் திருவொற்றியூர்க்கண் உறையும் பிச்சைத் தேவரே, மூன்று கண்களையுடையராகியும், என்னுடைய காதலையறிந்தும் இரங்குகின்றீரில்லையே என்னோ என்று கேட்டேனாக, பண்ணிசை போல மொழிபவளே, நின்னுடைய காதலன்பு பன்னாட்களாகச் சுவைதந்து பழகிய பழம் போல்கிறதென என் மனம் கருதியுளது என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.
கள் - மலரிடையூறும் தேன்; அதுவும் மயக்கம் தருவதுபற்றிக் கள் எனப்படுகிறது. மகிழ்தல் - மயங்குதல். “உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினும் காமம் இனிது” (குறள்) என்பது காண்க. அளி - வண்டு. வண்டுகளின் ஓசை இசைநெறிக்கும் பொருந்தாமை கண்டு “கள்மகிழ்வால் அளிமிழற்றும்” என உரைக்கின்றாள் கண்ணிற் கழகு கண்ணோட்டம். மூன்று கண்ணுடையராகியும் இரங்குகின்றீரில்லை என்ற குறிப்புத் தோன்ற “ஒரு மூன்று கண்கள் உடையீர்” என்று கூறுகின்றாள். ஒருபாற்பட்ட காதலாய் தன்னை வருத்துகின்றமையின், “என் காதல் கண்டும் இரங்கிலீர்” என்று இயம்புகின்றாள். பேசும் மொழிக்கண் தோன்றிய குரலோசை பண்ணிசையை நினைப்பித்தலின், “பண்கொண் மொழியாய்” எனப் பரிவு காட்டுகின்றார்; பின்னர்த் தாம் கூறப் போவதால் மனம் வருந்தாமை நினைந்து, நின் காதற்சுவை பன்னாள் உண்டு பழகிய பழச்சுவை போல்கின்றது; பல்லும் கூசும் அளவிற்குப் பழகிவிட்டது என்பாராய், “நின் காதல் பன்னாண் சுவை செய் பழம் போலும்” என மொழிந்து, இவ்வாறு என் மனம் கருதுகிறது என்பாராய், “எண் கொண்டிருந்தது” என்கின்றார்.
இதன்கண், என் காதல்கண்டு இரங்கிலீர் என்றாட்கு, நின்காதல் பன்னாட் சுவை செய் பழம் போலும் என்று கூறியவாறாம். (144)
|