1916. வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர்
வளஞ்சே ரொற்றி மாநகரீர்
குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக்
கொண்டீர் கொள்கை யென்னென்றே
னணங்கே யொருபா லன்றிநின்போ
லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
மிணங்கே மிணங்கே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; செங்கேழ் வண்ணங் கொண்டு இலங்கும் செஞ்சடையை யுடையராய், வளம் பொருந்திய திருவொற்றியூராகிய மாநகரின்கண் உள்ளவரே, அருட்குணம் பொருந்திய மிடற்றின்கண் ஒருபால் இருணிறம் கொண்டிருக்கின்றீரே; கொள்கை யாது என்று கேட்டேனாக, பெண்ணங்கே, இருளை ஒருபால் கொண்டதுண்டேயன்றி நின்போல் யாம் ஐம்பாலிற் கொண்டதில்லை; கோடற்குச் சிறிதும் இணங்கேம் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.
கேழ் - நிறத்துக்குப் பொதுவாயினும் செந்நிறமே சிறப்பாகக் குறிக்கும். வண்ணமும் நிறமும் சிறந்து ஒளி செய்வது பற்றிச் சிவன் செஞ்சடையை இவ்வாறு சிறப்பித்தார் என்று கோடலுமாம். ஊர்கள் வளமிக்கவிடத்து நகராகும் திறம் இந்நாளிற் காணப்படுதல் கொண்டு, ஒற்றியூ ரென்னது “வளஞ்சேர் ஒற்றி மாநகர்” என்றார் என்று கொள்க. தேவர் முதலாயினார்பாற் கொண்ட அருட்குணத்தின் அடையாளமாகக் கண்டம் கறுத்தமை பற்றிக் “குணங்கேழ் மிடறு” என்று கூறுகின்றார். பொன்னிறம் பெறற்குரிய மிடறு ஒருபால் கருமை நிறம் கொண்டது வரலாற்று நெறியில் உலகறிந்த தாயினும், அங்ஙனம் கோடற்குரிய கொள்கை வேறுண்டோ என்பாள்போலக் “கொள்கை என்”னென்று கேட்கின்றாள், பலியிட வந்த நங்கை. கருமை நிறம் கோடற்கு வேறு கொள்கையின்றேனும், வரலாற்றுண்மை தோன்ற மிடற்றில் ஒருபால் கருமை கொண்டேம்; உன்னைப்போல் ஐம்பால் முற்றும் இருணிறம் கொண்டேமில்லை; கொள்ளவும் இசையேம் என்பாராய், “ஒரு பாலன்றி நின்போல் ஐம்பால் இருள் கொண்டிட இணங்கேம் இணங்கேம்” என அடுக்கிக் கூறுகின்றார். மகளிர் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர் கூறுபவாதலின், அது பற்றி இவ்விங்கிதம் வந்ததென அறிக.
இதன்கண், மிடற்று ஒருபால் இருள் கொண்ட கொள்கை என்னே என்றாட்கு, ஒருபால் அன்றி நின்போல் ஐம்பால் இருள் கொள்ள இணங்கேம் என்று உரைத்தாராம். (145)
|