1917. கரும்பி லினியீ ரென்னிரண்டு
கண்க ளனையீர் கறைமிடற்றீர்
பெரும்பை யணியீர் திருவொற்றிப்
பெரியீ ரெதுநும் பெயரென்றே
னரும்பண் முலையாய் பிறர்கேட்க
வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
ரிரும்பொ னிலையே யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கரும்பு போலும் இனிமையும் என்னுடைய கண்ணிரண்டும் போலும் அருமையும் உடையவரே, விடக்கறை பொருந்திய கழுத்தை யுடையவரே, பெரிய படத்தையுடைய பாம்பை அணியாகப் பூண்டவரே, திருவொற்றியூர்க்கண் உறையும் பெரியவரே, நும் பெயர் யாதாம் என்று கேட்டேனாக, மலரரும்பு போலும் முலைகளை யுடையவளே, பிறர் செவியிற் கேட்குமாறு எமது பெயரைச் சொன்னால் எமக்கு அளிப்பீராக என்று பலரும் என்னைச் சூழ்ந்து கொள்வர்; என் பெயர்க்கண் உள்ள பொன்னென்பது மலையாகிய இடத்தைக் குறிப்பதேயன்றித் தருதற்குரிய பொருளைக் குறிப்பதன்று எனக் கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
கரும்பின்கண் உள்ள இனிமைப் பண்பு பிச்சைத்தேவர் குணம் செயல்களில் காண நிற்பது பற்றி, “கரும்பில் இனியீர்” என்றும், கண்ணிரண்டினுக்கும் உள்ள சிறப்பு பிற உறுப்புக்கட் கில்லாத அருமை பற்றி “என்னிரண்டு கண்கள் அனையீர்” என்றும், பிறர் வாழ்தல் வேண்டி நஞ்சுண்ட நாகரிகம் விளங்கக் “கறைமிடற்றீர்” என்றும், பொறியைந்தின் வாயிலாக உயிரை இயக்கியருளும் இயவுளாம் தன்மை புலப்படப் “பெரும்பை அணியீர்” என்றும் பிச்சைத் தேவரைப் புகழ்கின்றாள். செயற்கரிய செய்தலின் தன்னிகரற்றவ ராதல் பற்றி “பெரியீர்” என்று குறிக்கின்றாள். நுமது பெயர் யாது என்பாளாய், “எது நும் பெயர்” என்றாளாக, அவளுடைமைச் செவ்வியைச் சிறப்பித்து, “அரும்பண் முலையாய்” என உரைக்கின்றார். அண்ணுதல் - நிகர்த்தல். மெல்ல உரைக்கின், திருவொற்றியூரிற் சிவன் பெயர் செம்பொற்றியாகர் என்பது. இப்பெயரை நன்கு அறியச் சொன்னால் பிறர் செம் பொன்னை அள்ளித் தருபவர் என்று கருதி, “எமக்கு அளிப்பீர், அளிப்பீர்” என்று நாற்புறமும் மொய்த்துக் கொண்டு இனிது இயங்கவிடார் என்பாராய், “பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச் சூழ்வர்” என்றும், எமது பெயரிலுள்ள செம்பொன், கொடுத்தற்குரிய பொருள் அன்று; இருக்கும் மலைக்குப் பெயர்; எடுக்க முயல்வோர் இராவணன் போல் இடப்படுவர் என்றற்கு, “இரும்பொன் இலையே” என்றும் உரைக்கின்றார்.
இதன்கண், பெயர் எது என்றாட்கு மெல்ல உரைக்கின் செம்பொன் தியாகர் என்பது; பிறர் கேட்கவுரைக்கின் அளிப்பீர் எனச் சூழ்வர், இரும்பொன் இலை என்று விடை கூறினாராம். (146)
|