1918. நிலையைத் தவறார் தொழுமொற்றி
நிமலப் பெருமா னீமுன்னர்
மலையைச் சிலையாக் கொண்டீர்நும்
மாவல் லபமற் புதமென்றேன்
வலையத் தறியாச் சிறுவர்களு
மலையைச் சிலையாக் கொள்வர்களீ
திலையற் புதந்தா னென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; ஒழுக்க நெறி நிற்றலில் தவறாதவர் தொழுது வணங்கும் திருவொற்றியூரில் எழுந்தருளும் நின்மலப் பெருமானாகிய நீவிர், முன்னை நாளில் மலையை வில்லாகக் கொண்டீர்; அது மிக்க பெரும் வல்லமையும் அற்புதமுமாம் என்று சொன்னேனாக, இப் பூவலயத்தில் அறிவறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாகக் குறித்துப் பேசுகின்றார்; இதில் ஓர் அற்புதமும் இல்லைகாண் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.
நிலை - ஒழுக்கத்து நிற்கும் நிலை. நிமலப் பெருமான் - மலத் தொடர்பில்லாத பெருமான். மேருமலையை வில்லாக வளைத்த வரலாற்றை நினைந்து “முன்னம் மலையைச் சிலையாக் கொண்டீர்” என்றும், அது போலப் பிறர் செய்ததின்மையின் “மாவல்லபம் அற்புதம்” என்றும் கூறினாள். வல்லபம் - வன்மை; வல்லமையுமாம். முன்னம் - திரிபுரத் தசுரரொடு போர் செய்யச் சென்ற காலம். வலையம் - வட்டம்; பூவட்டம் இங்கே வலையம் என்று கூறப்படுகிறது. அறிய வேண்டுவனவற்றை அறியாச் சிறுபருவத் திளைஞரை “அறியாச் சிறுவர்” என்கின்றார். மலைநாட்டு அறியாச் சிறுவர், மலையைக் கல்லென்று வழங்குவராதலின், “மலையைச் சிலையாக் கொள்வர்” என உரைக்கின்றார். “கல்லுயர் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி” (குறுந். 275) என்பது காண்க. மலையை என்றதை, மலைய எனப் பாடம் கொண்டு, ஒருவரோடொருவர் பொருதற்குக் கல்லையெடுத் தெறிவர் என்று உரைப்பதும் உண்டு.
இதன்கண், நீர் மலையைச் சிலையாக் கொண்டீர் என்றாட்குச் சிறுவர்களும் மலையைக் கல்லாக் கொள்வார்களாதலால் அதில் அற்புதம் இல்லை என்றாராயிற்று. (147)
|