1919.

     உதயச் சுடரே யனையீர்நல்
          லொற்றி யுடையீ ரென்னுடைய
     விதயத் தமர்ந்தீ ரென்னேயென்
          னெண்ண மறியீ ரோவென்றேன்
     சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ
          துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
     மிதையுற் றறிநீ யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     நல்ல ஒற்றியூர்க்கண் உறைபவரே, காலையில் எழுகின்ற ஞாயிற்றைப் போன்று விளங்கும் நீவிர் என்னுடைய மனத்தின்கண் அமர்ந்திருக்கின்றீராயினும் எனது எண்ணத்தை அறியீரோ என்று கேட்டேனாக, அமுதம் போன்று ஒளிர்பவளே, மனத்தின் நீங்கி வெளிப்பட்டு உன்னுடைய எதிரே போந்தது உனது எண்ணத்தை அறிந்தேயாம்; இதனை நீ நன்கு எண்ணிப் பார்ப்பாயாக என்று கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     உதயச் சுடர் - காலையில் கிழக்கில் வானத்தில் எழுந்தொளிரும் ஞாயிற்றொளி. 'இளங்கதிர் ஞாயிறு, என்பது இது பற்றியே என்க. இதயம் - மனம். அடியேன் மனத்துள் இருந்தும் அங்கும் நிகழும் என் எண்ணங்களை அறிந்திருப்பீராதலால், அவற்றை நிறைவியாதிருப்பது என்னையோ என்பாளாய், “என்னுடைய இதயத்தமர்ந்தீர், என்னே என் எண்ணம் அறியீரோ” என்று கேட்கின்றாள். சுதை - அமுதம். நின் எண்ணம் அத்தனையும் எம்பாற் பெறலாகும் இன்பத்தை நாடி நின்றமையறிந்தே, பலிவேண்டி வருபவனாய் வெளிப்பட்டு இத் துறவுக் கோலத்தில் வந்தோம்; உன் அகத்துறை எண்ணத்தையும் புறத்தே வெளிப்பட்டு நிற்கும் எனது நிலையையும் சீர் தூக்கித் தக்கது செய்க என்பாராய், “எண்ணம் அறிந்து மனத்தினின்றும் வெளிப்பட்டுப் பற்றுக்களைத் துறந்து உன் எதிர் அடைந்துள்ளோம்; இதை உற்றறி நீ” என்று உரைக்கின்றார். இனி, நீயும் பற்றற்று உள்ளத்துறவு பூண்டு எம்போலும் தொண்டர்க்குப் பணிசெய்து சிவம் பெறுதலை எண்ணுக என்பது. “இதை உற்றறி நீ” என்றதன் கருத்தாம்.

     இதன்கண், என் இதயத்தமர்ந்தீர் என்னுடைய எண்ணம் அறியீர் என்னோ என்றாட்கு, எண்ணமறிந்தே வெளிப்பட்டுத் துறந்து எதிர் அடைந்தேம்; இதனை உற்றறிக என விடையிறுக்கின்றாராம்.

     (148)