1920.

     புரக்குங் குணத்தீர் திருவொற்றிப்
          புனித ரேநீர் போர்க்களிற்றை
     யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ
          ருள்ளத் திரக்க மென்னென்றேன்
     கரக்கு மிடையாய் நீகளிற்றின்
          கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
     னிரக்க மிதுவோ வென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; எவ்வுலகும் புரந்தருளும் குணமுடையராய்த் திருவொற்றியூரில் எழுந்தருளும் புனிதராகிய நீவிர் போர் கருதி வந்த யானையைப் பெருங் கலக்கம் உறுமாறு தோலை யுரித்தீர்; உமது உள்ளத்தின் இரக்கத்தை என்னென்பது என்றேனாக, சிறுமையால் மறையும் இடையை யுடையவளே, நீ களிற்றியானைக் கன்றை நின் நடையால் நாணி மனம் கலக்கமுறச் செய்துள்ளாய்; உனது உள்ளத்து இரக்கப்பண்பு இதுவோ என் இகழ்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     உயிர்கட்கு வேண்டும் உடல் கருவி கரண உலக போகங்களைத் தந்து உய்விக்கும் அருட்செயலை வியந்து “புரக்கும் குணத்தீர்” என்று புகல்கின்றாள். போர்கருதி வந்த கயாசுரனைக் கொன்று தோல் உரித்துப் போர்த்த வரலாற்றை “போர்க்களிற்றை உரக்கும் கலக்கம் பெற உரித்தீர்” என்று குறிக்கின்றாள். “குருதி கக்கியே ஓலிட அவுணர்தம் குலத்துக் கரியுரித்தனன் கண்டு நின்றம்மையும் கலங்க” என்று (ததீசி.. யுத்த; 146) என்று கந்தபுராணம் கூறுகிறது. உரக்கும் கலக்கம் - மிக்குறும் கலக்கம்; மிகுத்த குரலை, உரத்த குரல் என்றாற் போல். உலகுயிர்கட்கு தீங்கு செய்த கயாசுரனை இரக்கமின்றிக் கொன்றதை இகழ்ந்துரைத்தல் தோன்ற “உள்ளத் திரக்கம் என்” என உரைக்கின்றாள். இடைசிறுத்து உண்டோ இல்லையோ என்னுமாறு ஒசிதல் குறித்து, “கரக்கும் இடையாய்” எனப் புகன்று, களிற்றியானைக் கன்றின் ஒல்கு நடை இளமங்கையர் நடைக்கு ஒப்புக்கூறும் மரபு நோக்கி, “நீ களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை நின் இரக்கம் இதுவோ” என்று எள்ளிப் பேசுகின்றார்.

     இதன்கண், களிற்றைக் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத் திரக்கம் என் என்றாட்கு, நீ நடையால் களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை; இரக்கம் இதுவோ என எதிர்மாற்றம் தந்து இகழ்ந்தாராம்.

     (149)