1921.

     பதங்கூ றொற்றிப் பதியீர்நீர்
          பசுவி லேறும் பரிசதுதான்
     விதங்கூ றறத்தின் விதிதானோ
          விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
     னிதங்கூ றிடுநற் பசுங்
          கன்றை நீயுமேறி யிடுகின்ற
     யிதங்கூ றிடுக வென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நூல்கள் புகழ்கின்ற திருவொற்றியூரையுடைய தேவரே, நீவிர் கட்டப்படும் விலங்காகிய எருதின்மேல் ஏறி வருகின்ற தன்மை, வகைவகையாய் உரைக்கும் அறநூல் காட்டும் விதி விலக்குகளில் யாதோ கூற வேண்டும் என்று கேட்டேனாக, நாடோறும் கடைகளில் கூறு செய்து விற்கப்படும் நல்ல பசுமையான கைவளைகளை நீயும் கைகளில் ஏற்றி யணிந்து; கொள்ளுகின்றாயே, இதற்கு இதமாக விடை தருக என வுரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     பதம் - சொல்; ஈண்டுப் பதங்களால் ஆகிய நூல்களைக் குறிக்கிறது. பசு - கட்டி வைத்து வளர்க்கப்படும் விலங்குகட்குப் பொதுப்பெயர்; இது சிவபெருமான் ஊர்ந்தருளும் எருதுக்காயிற்று. “பல பலவேடமாகும் பரன் நாரிபாகன் பசு வேறும் எங்கள் பரமன்” (கோளறு) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அறங்களைத் தொகுத்தும் வகுத்தும் கூறும் மரபை “விதம்” என்றும், அவற்றைச் செய்க என விதிவாய் பட்டாலும் செய்யற்க என விலக்கு வாய்பாட்டலும் ஓதும் முறையை “விதிதானோ விலக்கோ” எனவும் கேட்கின்றாள். 'நித்தம்' என்பது நிதம் எனவும் வழங்கும். கூறிடுதல் - பங்கு செய்தல். பசுங்கன்று - பச்சைவளை. “கன்றணி கரத்து எம் அன்னை” (சீகாளத்தி) என்பர் சிவப்பிரகாச சுவாமிகள். ஏற இடுதல் - கைகளிற் பொருந்த அணிதல். மாறுற்றுரைப்பதற்கு மனம் நோவாது இனிமையுறப் பேசுக என்பாராய், “இதம் கூறிடுக” என இயம்புகிறார்.

     இதன்கண், நீர் பசுவிலேறும் பரிசு அறத்தின் விதியோ விலக்கோ என்று கேட்டவட்கு, நீ பசுங்கன்றை ஏறியிடுகின்றாயே, என்னை இதம் கூறுக என்று மாற்றம் தந்தாராம்.

     (150)