1922.

     யோக முடையார் புகழொற்றி
          யூரிற் பரம யோகியராந்
     தாக முடையா ரிவர்தமக்குத்
          தண்ணீர் தரநின் றனையழைத்தேன்
     போக முடையாய் புறத்தண்ணீர்
          புரிந்து விரும்பா மகத்தண்ணீ
     ரீக மகிழ்வி னென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரில் யோகிகள் புகழும் பரம யோகியாகவுள்ள இத் தேவர் தாகமுடையராய் வந்தார்; அவர்க்குத் தண்ணீர் தரும் பொருட்டு உன்னையழைத்தேன்; உடனே, இவர் என்னை நோக்கிப் போகம் உடையவளே, யாம் புறத்தே கிடைக்கும் தண்ணீரை வேண்டியிருந்தேம்; மனமகிழ்ந்து உன் அகத்தே யூறும் தண்ணீரைத் தருக என்று இசைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     சிவபெருமான் பெரிய யோக மூர்த்தியாயினும், யோகத்தையே புரிபவராதல் பற்றி “யோகம் உடையார் புகழ் பரம யோகியார்” என்று சிறப்பிக்கப்படுகின்றார். நல்ல போகத்தன் யோகத்தை யேபுரிந்தான்” (நல். பெருமணம்) என்று ஞானசம்பந்தரும், “பரமயோகீ” (தில்லை) என்று நாவுக்கரசரும் கூறுவது காண்க. இளமகளிர்க்குப் பெண்ணீர்மை பெரும் போகமாதலால், அதனை நன்குடையாளைப் “போக முடையாய்” என்று புகழ்கின்றார். உமாதேவியைப் “போகமார்த்த பூண்முலையாள்” (நள்ளா) என ஞானசம்பந்தரே பாடுவது காண்க. புறத் தண்ணீர் - நிலத்தில் நீர்நிலைகளிற் காணப்படும் தண்ணீர் மனமாகிய அகத்தின்கண் ஊறுவது அன்புத் தண்ணீர். புறத்துநீர் தட்பவெப்பங்களால் நிலைவேறுபடும்; அன்புநீர் தண்ணீர்மை ஒருகாலும் வேறுபடுதலோ மாறுபடுதலோ இல்லையென அறிக. அச்சிறப்புப் பற்றியே “அகத்தண்ணீர் மகிழ்வின் ஈக” எனத் தேவர் கேட்கின்றார். மெய்யன்பர்களும் இறைவனும் வேண்டுவது அண்பொன்றே என்பதைக் காரைக்கால் அம்மையார் இறைவனை நேரிற்கண்டு, தலையாய பொருளாக வேண்டியது, “இறவாத இன்ப அன்பு” என்றும், மாணிக்கவாசகர் வேண்டியது “வேண்டும் நின்கழற்கன்பு” என்றும் கேட்பதனால் அறிகின்றோம்.

     இதன்கண், தாகமுடையராய் வந்த தேவர்க்குத் தண்ணீர் தரக் கருதுவதும், அதனை ஏலாது அவர் அன்பாகிய அகத் தண்ணீர் வேண்டுவதும் கூறியவாறாம்.

     (151)