1923. வளநீ ரொற்றி வாணரிவர்
வந்தார் நின்றார் மாதேநா
முளநீர்த் தாக மாற்றுறுநீ
ருதவ வேண்டு மென்றார்நான்
குளநீ ரொன்றே யுளதென்றேன்
கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
விளநீர் தருக வென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; நீர்வளம் பொருந்திய ஒற்றியூர்க்கண் வாழ்பவராகிய இத்தேவர், நம்மனைக்கு வந்து நின்று, மாதே, எம்முள் தோன்றிய நீர் வேட்கையைத் தணித்தற்கேற்ற நீரை உதவவேண்டுமென்று கேட்டாராக, யான் குளநீர் உளது கொள்க என்று சொன்னேன்; இவர், யாம் அதனைக் கொள்ளேன்; இடைக்கு மேற் சுமக்கின்ற இளநீரைத் தருக என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
ஒற்றி வாணர் - ஒற்றியூரில் வாழ்பவர். ஒற்றியூர் கடற்கரைக் கண்ணதாகலின், தாகம் தணித்தற்கேற்ற இனிய நீர் வேண்டும் என்றற்குத் “தாகம் மாற்றுறுநீர் உதவ வேண்டும்” என்று கேட்டார். அவர்க்கு விடை கூறுபவள், குடிநீராகக் குளத்து நீரேயுளது; வேறே கிணறுகளிலும் ஆறுகளிலும் கிடைக்கப்பெறும் தண்ணீர் இல்லை என்ற கருத்துத் தோன்ற, “குளநீர் ஒன்றே யுளது” என்று கூறுகின்றாள். குளத்து நீரில் உவர்ப்புண்மையின் வேண்டேம்; இடைமேற் சுமந்து நிற்கும் இளநீரைத் தருக என்பாராய், “இடைமேற் கொளும் இந்த இளநீர் தருக” என்று சொல்லுகின்றார். தேவருடைய தோற்றமும் மாற்றமும் நங்கையின் கருத்தில் காதற்குறிப்பைத் தூண்டினமையின், தன் கொங்கைகளை இளநீர் என்று கருதி இங்ஙனம் இங்கிதம் பேசுகின்றார் போலும் என மயங்கினவளாய், “இதுதான் சேடீ என்னே டீ” என இயம்புகிறாள். இதன்கண், தாகம் மாற்றுற நீர் வேண்டும் என்றார்க்குக் குளநீர் ஒன்றேயுளது என நங்கை மொழிவதும், அவர் அதனை மறுத்து இளநீர் தருக என்பதும் இங்கிதவுரை யாயவாறாம். (152)
|