1924.

     மெய்ந்நீ ரொற்றி வாணரிவர்
          வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
     ரந்நீ ரிலைநீர் தண்ணீர்தா
          னருந்தி லாகா தோவென்றேன்
     முந்நீர் தனையை யனையீரிம்
          முதுநீ ருண்டு தலைக்கேறிற்
     றந்நீர் காண்டி யென்கின்றா
          ரிதுதான் சேடீ யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; மெய்ந்நீர்மை பொருந்திய திருவொற்றியூரில் வாழ்பவராகிய இவர், வெந்நீர் வேண்டுமென்று கேட்டார்; அவர்க்கு நான், வேண்டுகிற அந்த வெந்நீர் இல்லை எனக் கூறியதோடு அமையாமல், நீர் தண்ணீர் அருந்தக் கூடாதோ என்று வினவினேனாக, கடலுக்கு மகளான திருமகளைப் போன்றவளே, பழமையான நீருண்டதனால் தலைக்கேறித் தடுமம் உண்டாக்கி விட்டது; இந் நீர்மையைக் காண்பாயாக என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     மெய்ந் நீர்மை - வளமை மாறாமை; ஒருகாலத்து வளமுடைமையும் ஒருகாலத்து அஃது இன்மையும் இன்றி எக்காலத்தும் குன்றா வளமுடைமையை மெய்ந்நீர்மை என்று விளம்பப்படுகிறது. வெப்பமும் தட்பமும் செயற்கையாய் ஊட்டப்படுதலின், வெந்நீரை “வெம்மையுள நீர்” என உரைக்கின்றார். மிக்க வெப்பமும் தட்பமும் இல்லாததை “வெப்பத் தண்ணீர்” (குறுந். 277) என்ப. அங்ஙனம் நீவிர் விரும்புமளவு வெம்மையுள்ள நீர் எம்மிடம் இல்லை என்பாளாய் “அந்நீர் இலை” என்று சொல்லி, வெந்நீர் வேண்டிய குறிப்பு தண்ணீரை விலக்குவதோர்ந்து காரணம் அறிவாளாய், “நீர் தண்ணீர் அருந்துதல் ஆகாதோ” என்று வினவுகின்றாள். கடல் கடைந்த காலத்தில் அதனின்றும் பிறந்தமையால் திருமகளைக் கடல் மகள் என்பர்; அதனால், திருமகள் போன்ற நங்கையை “முந்நீர் தனயை” எனக் குறிக்கின்றார். தண்ணீர் புதிதாயின் தீமையில்லை; ஓரிருநாள் பழமை யுற்றதாயின் நன்றாகாது என்பாராய், “முதுநீ ருண்டு தலைக் கேறிற்று” என மொழிகின்றார். முதுமை - பழமை. பொதுவாகத் தண்ணீரைக் காய்ச்சாது பருகலாகாது என்பர் மருத்துவப் புலவர். அது பழமை பட்டதாயின் உண்பார்க்கு நோய் விளைவித்தல் மெய்யாதலால், “நீர் கருக்கி” யுண்க என்கின்றனர். பழமைத் தண்ணீர் அருந்தியதால் அது தலைக்கேறி நீர்க்கோள் தடுமம் ஆகிய நோய் தந்தது காண்பாயாக என்றற்கு, “இந்நீர் காண்டி” என்று உரைக்கின்றார்.

     இதன்கண், பிச்சைத்தேவர் வெம்மை நீர் வேண்டு மென்றாராக, நங்கை தண்ணீர் அருந்தலாகாதோ என்றாட்கு, முதுநீருண்டு தலைக்கேறிற்று, இந்நீர் காண்டி என்று கூறுகின்றாராம்.

     (153)