1925.

     சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர்
          சிறிதாம் பஞ்ச காலத்துங்
     கோலஞ் சார்ந்து பிச்சைகொளக்
          குறித்து வருவீ ரென்னென்றேன்
     காலம் போகும் வார்த்தைநிற்குங்
          கண்டா யிதுசொற் கடனாமோ
     வேலங் குழலா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நல்லொழுக்கம் பூண்ட திருவொற்றியூர்ப் பிச்சைத்தேவரே, பொருள் விளைவு சிறிதாகிய பஞ்ச காலத்திலும் பலியேற்றற்குரிய வேடம் தாங்கிப் பிச்சை பெறுவது கருதி வருகின்றீரே, என்னோ காரணம் என்று வினவினேனாக, ஏலமாகிய மயிர்ச் சாந்தணிந்த கூந்தலையுடையவளே, காலம் போகும் வார்த்தை நிற்கும் என்று மூதுரையை நீ அறிவாய்; இது சொல்லுவது ஈகைக்கடன் கழிப்பதாகாது என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     சீலம் - நல்லொழுக்கம். விளைவு சிறிதும் வேண்டுவார் தொகை பெரிதுமாய காலம் பஞ்சகாலமாதலின், “சிறிதாம் பஞ்சகாலம்” என்றும், அக்காலத்தே ஈபவர் மிகச் சிலராகவும், ஏற்பவர் பலராகவும் உளராதலின், பிச்சை குறித்து வறுமை வேடம் பூண்டு வருவது நன்றன்று; இது சான்றோராகிய தாங்கள் அறிந்ததொன்று என்பாளாய், “கோலம் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீர், என் என்று வினவினேன்” என்றாள். கோலம் - வறுமை வேடம்; ஏற்பதன் இகழ்ச்சி குறியாது ஈவதைக் கொள்வதையே குறித்து வருவது பற்றி, “பிச்சை கொளக் குறித்து வருவீர்” என்றும், அறிவுடையோர் காரணமின்றி யாதும் செய்யார் என்பதுபற்றி, “என்” என்றும் இயம்பினாள். அவட்கு விடை கூறலுற்ற தேவர், இவ்வறுமைக் காலம் நிலைத்திராது; சின்னாட்களில் கழிந்து போம்; இக்காலத்தில் அருளிக் கூறும் இன்சொல்லினும் வெகுண்டு கூறும் வெஞ்சொல் நிலைபெற்று நற்காலத்தில் நினைவிற்றோன்றி ஈகைக் கடனை ஆற்றாத இளிவரவு பயந்து, மனத்துக்கு நோய் செய்யும் என்பாராய், “இது சொற்கடனாமோ” என்று கூறுகின்றார். சொல், தொழிற் பெயர்.

     இதன்கண், பஞ்சகாலத்துக் கோலம் சார்ந்து பிச்சைகொள வருதல் என் என்றாட்குக் 'காலம் போகும் வார்த்தை நிற்கும்; இது சொல்லுதல் ஈகைக்கடன் ஆற்றிய தாகாது' என இயம்புகின்றாராம்.

     (154)