1926. ஊற்றார் சடையீ ரொற்றியுளீ
ரூரு ரிரக்கத் துணிவுற்றீர்
நீற்றால் விளங்குந் திருமேனி
நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
சோற்றா லிளைத்தே மன்றுமதி
சொல்லா லிளைத்தே மின்றினிநா
மேற்றா லிகழ்வே யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; வேண்டுமிடத்து ஊற்றப்படும் நீராகிய கங்கை தங்கிய சடையுடன் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத்தேவரே, பலியிரக்கும் செயல் மேற்கொண்டு நீர் ஊரூர் புகுந்து ஈபவர் ஈவதை யேற்று இப்போது மேனி இளைத்து விட்டீரே என்று சொன்னேனாக, யாம் சோற்றுக்கு இரந்து மெலிந்தேமில்லை; உன்னுடைய சொற்களைக் கேட்டுத் தான் இந்நாளில் இளைத்துப் போனோம். இனி பலியேற்கச் செல்வது இகழ்வேயாம் என்று இயம்புகின்றார். இதுதான் என்னே. எ.று.
கங்கை தங்குதற்கு இடமாகிய சிவன் சடை, நிலத்தின்கண் பகீரதன் பொருட்டு சென்றொழுகுமாறு அக் கங்கை நீரை ஊற்றிய காரணம் பற்றி, “ஊற்றார் சடையீர்” என உரைக்கின்றார், நிலம் போல நீர் ஊறும் தகவு சடைக்கின்மை கண்டே, “ஊர் சடை” எனல் வேண்டிற்று. இரத்தல் இயல் பன்றாயினும், அடியார்கட்கு அருள்புரிவது காரணமாக அதனைத் துணிந்து மேற் கொண்டார் என்பது புலப்பட, “ஊரூர் இரக்கத் துணி வுற்றீர்” என்றும், இரத்தற்றொழிலின் சிறுமை அதனை விரும்பி மேற் கொண்டாரை உருக்குலைத்து உள்ளத்தையும் ஒழிக்குமாகலின், அதனைக் கண்டு இரங்குவாள் போன்று, “திருமேனி நேர்ந்து இங்கு இளைத்தீர்” என்றும் பலியிடும் நங்கை பகர்கின்றாள். நீறணியும் பெருமானாதல் பற்றி “நீற்றால் விளங்கும் திருமேனி” என்று சிறப்பிக்கின்றார். அவட்கு விடை கூறும் பிச்சைத்தேவர், மேற்கொண்ட இரத்தற்றொழில் பலியுணவைச் சிறுமைப்படுத்தி உடலை இளைக்கச் செய்யவில்லை; ஈதற் றொழிலைச் செயும் நீ வழங்கும் சொல்தான் என்று உடல் இளைக்கச் செய்தது என்பாராய், “சோற்றால் இளைத்தேமன்று, உனது சொல்லால் இளைத்தேம்” என்றும், இனி, இச்சொல் எங்கும் பரந்து எவர்பாலும் இடம் பெறுமாகலின், ஏற்பது இனி எவ்வகையாலும் இழிவேயாம் என்பாராய், “இன்று இனி நாம் ஏற்றால் இகழ்வே” என்றும் உரைக்கின்றார்.
இதன்கண், இரக்கத் துணிந்து திருமேனி இளைத்தீர் என்று கேட்டாட்கு, இரத்தற்றொழிலால் இளைத்தேமில்லை, ஈபவர் சொல்லால் இளைத்தேம் என விடையிறுத்தாராம். (155)
|