1927. நீரை விழுங்குஞ் சடையுடையீ
ருளது நுமக்கு நீரூருந்
தேரை விழுங்கும் பசுவென்றேன்
செறிநின் கலைக்கு ளொன்றுளது
காரை விழுங்கு மெமதுபசுக்
கன்றின் றேரை நீர்த்தேரை
யீர விழுங்கு மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: கங்கையாற்று நீரைத் தனக்குள் அடக்கிக் கொண்ட சடையையுடையராகிய பிச்சைத்தேவரே, உமக்கு உளதாவது நீர் ஊரும் தேரை வாயிற் பெய்து விழுங்கும் பசுவன்றோ என்றேனாக, செறியவுடுத்த நின் கலைக்குள் ஒன்று உளது; அது எமது பசுவின் கன்று செலுத்துந் தேரையும், நீர் வாழும் தேரையையும் ஈர்த்து விழுங்குவதாம் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.
பெருவன்மையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்று நீரை ஒரு துளியளவும் சிதறி வீழாதவாறு சடைக்குள் ஒடுக்கிக் கொண்டிருப்பபது பற்றிச் சிவனை “நீரை விழுங்கும் சடையீர்” எனப் பலியிடும் நங்கை கூறுகிறாள். அவள் திரிபுர மெரித்த காலத்துச் சிவனுக்கு தேராகியது நினைந்து, இப் பூமியை “நீர் ஊரும் தேர்” என்று சொல்லுகிறாள். இதனைத் திருமால் உண்டுமிழ்ந்த செய்தியை நினைவிற் கொண்டும், அத்திருமால் சிவனது விடையானது கொண்டும் உமது தேரைவிழுங்கும் பசு என்பாளாய், “நீர் ஊரும் தேரை விழுங்கும் பசு” என்று உரைக்கின்றாள். இவட்கு மறுமாற்றம் உரைக்கலுற்ற தேவர், உனது அல்குல் பாம்பின் படம் போல்வதால் பாம்பாம் எனக் குறிப்பாராய், “செறிநின் கலைக்குள் ஒன்றுளது” என்று கூறுகின்றார். கலை - இடையில் உடுக்கும் சேலை. பசு என்ற சொல், கட்டப்படும் விலங்குக்குப் பொதுப் பெயராதலால், விடையுருக் கொண்ட திருமாலைப் பசு என்று குறித்து, அவருடைய மகனான மன்மதனைப் “பசுக்கன்று” எனக் குறித்துரைக்கின்றார். திருமால் கார்மேகத்தின் நிறத்தினும் அழகால் மேம்பட்டது தோன்ற “காரை விழுங்கும் எமது பசு” என்கின்றார். பசுக்கன்றான மன்மதனுக்குத் தேர் தென்றற்காற்று. படமுடைய பாம்பு தென்றற் காற்றையும் நீரில் வாழும் தவளையையும் இழுத்து விழுங்கும். அதனால், பசுக்கன்றின் தேரை நீர்த் தேரை ஈர விழுங்கும்” என்று இயம்புகின்றார். ஈர்த்து என்பது, ஈர என வந்தது. தேரை - தவளை.
இதன்கண், நுமக்கு நமது தேரை விழுங்கும் பசுவுளது என்றாட்கு, அப் பசுவின் கன்றின் தேரையும், நீர்த்தேரையையும் விழுங்கும் பாம்பு ஒன்று நின் கலைக்குள் உளது என உரைக்கின்றார். (156)
|