1929. அடையார் புரஞ்செற் றம்பலத்தே
யாடு மழகீ ரெண்பதிற்றுக்
கடையா முடலின் றலைகொண்டீர்
கரமொன் றினிலற் புதமென்றே
னுடையாத் தலைமேற் றலையாக
வுன்கை யீரைஞ் ஞூறுகொண்ட
திடையா வளைக்கே யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பகையசுரரின் முப்புரத்தை யழித்து அம்பலத்தே ஆடல் புரிகின்ற அழகரே, எண்ணப்பட்ட பிரமர் பதின் மருள் ஒன்பதின்மர் இறந்தபின் கடையாய பிரமரது கடையாயவுடலின் தலையைக் கையிற் கொண்டீரன்றோ; அஃது அற்புதமாகும் என்றேன்; அது கேட்டதும், தம்மில் மோதி யுடையாதவாறு தலைமேற் குவியும் உன்கை, இடையேயுள்ள வளைகட்குத் தலையாகத் தலை ஈரைஞ்ஞாறு கொண்டது அற்புதம் என்று இசைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
அடையார் - அன்பால் வந்தடையாமல் பகைமையால் விலகினவர்; அவர் திரிபுரத்தசுரர் என்பது “புரம்” என்பதனால் பெறப்பட்டது. எண்பதிற்று - ஒன்றிரண்டென முறையே எண்ணப்படும் பத்து. இதன் கடையாயது, ஒன்பதொழிந்த ஒன்று. பிரம தேவரும், அவர் புதல்வர் மரீசி முதலாகிய ஒன்பதின்மரும் சேரப் பதின்மர் பதுமத்தர். அவர்கள் இங்கே எண்பதிற்றுப் பதுமர் ஆவர்; அவருள் கடையாய பிரமதேவர் உடலின் தலையைச் சிவன் கையில் ஏந்திக் கொண்டாரென்பது புராணச் செய்தி. “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்” என்பர் திருநாவுக்கரசர். பதின்மர் பிரமர்கள் இறந்துபட ஒருவர் தலையைச் சிவன் கையில் ஏந்தியது வியப்பைத் தருவதுபற்றி, “கடையா முடலின் தலைகொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம்” என்று பலியிடும் நங்கை பிச்சைத்தேவரைக் கேட்கின்றாள். தலையாய உயிர் நீங்கியபின் தேவ வுடம்பாயினும் அது கடைப்பட்டதாகலின் “கடையாம் உடல்” எனப்பட்டதென்று கொள்க. தலைமேற் கைகுவியுங்கால் வளைகள் தம்மில் மோதியுடையாதவாறு இடையுள்ள வளைகட்குத் தலைவளையாகக் கங்கணம் அணிந்தேந்துகின்றாய்; கங்கணம், கம் கணம் எனப் பிரிந்து தலைகள் பல என்று பொருள்படுதலால், கையில் தலைகள் ஆயிரம் கொண்டது அற்புதமன்றோ என்பாராய், “தலைமேல் உன் கைவளை இடையாய வளைகட்குத் தலையாக ஈரைஞ்நூறு கொண்டது அற்புதம்” என இசைக்கின்றார். ஈரைஞ்நூறு, பல என்னும் பொருளது.
இதன்கண், நீர், கையில் கடையாம் தலை ஒன்று கொண்டது அற்புதம் என்றாட்கு, நீ கையில் தலையாகத் தலை ஐஞ்நூறு கொண்டது அற்புதமாம் என்றார் என்பது. (158)
|