193.

    மருளிலாதவர்கள் வழுத்து நின்னடியை
        மனமுற நினைந்தகத் தன்பாம்
    பொருளிலாதவர்பால் ஏழையேன் புகுதல்
        பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    அருளெலாம் திரண்ட ஆனந்த வுருவே
        அன்பர்பால் இருந்திட அருளாய்
    தரளவான் மழை பெய்திடுந் திருப்பொழில்சூழ்
        தணிகை வாழ் சரவண பவனே.

உரை:

     முத்துப் போல் மழைத் துளியைச் சொரியும் அழகிய சோலைகள் பொருந்திய தணிகைச் சரவண பவனே, மனத்தில் மருட்சி யில்லாத நல்லோர் வணங்கிப் பரவும் உன்னுடைய திருவடியை மனமார எண்ணி அதன் உண்ணிறையும் அன்பாகிய நன்பொரு ளில்லாதவரிடத்திற்கு ஏழை யாகிய யான் சென்று புறக்கணிக்கப் படுவதைப் பொறுக்க மாட்டேனாகின்றேன்; அருள் வகை யத்தனையும் திரண்டு ஆனந்தமாகிய உருவை யுடையவனே, உனக்கு அன்பராயினார் பக்கமே யான் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன், எ. று.

     சோலைகளில் சொரியும் மழைத் துளிகள் முத்துப் போலுதலால் “தரள வான்மழை” என்று புனைந்துரைக்கின்றார். பொருளல்ல வற்றைப் பொருளென்றுணரும் திரிபுணர்வை மருள் என்பவாகலின், அம்மருள் உணர்வு இன்றித் தெளிவுடைய நல்லறிஞர்களை “மருளிலாதவர்கள்” எனவும், அவர்கள் முருகனது பரமாந் தன்மையைத் தெளிந்து வழிபடுவதை மறவாதவராதலால், “மருளிலாதவர்கள் வழுத்தும் நின்னடி” எனவும், அதனை மனத்திற் கொண்டு அன்பாகிய ஞானப் பொருளால் வழிபடுவதில்லாதவர் பயன்படாத கடையராதலால் அவர்களை யடைந்து உறவாடுதல் தீமை பயப்பது எண்ணி, “அகத்து அன்பாம் பொருளிலாதவர்பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்” எனவும் இயம்புகின்றார். அருளே திருமேனி யுற்று ஆனந்தம் நல்கும் சிறப்புப் பற்றி, “அருளெலாம் திரண்ட ஆனந்த உருவே” என்கின்றார். எனினும் அமையும். மெய்யன்பர் கூட்டம் ஞானமே உணர்த்தி நல்லருள் பெறுவிக்கும் நலம் உடையதாகலின், “அன்பர்பால் இருந்திட அருளாய்” என்று வேண்டுகின்றார்.

     இதனால், தெருண்ட மேலவரை யடைந்து திருவருட் பாங்கினராக அருள வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (3)