1930.

     தேவர்க் கரிய வானந்தத்
          திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
     மேவக் குகுகு குகுகுவணி
          வேணி யுடையீ ராமென்றேன்
     தாவக் குகுகு குகுகுகுகுத்
          தாமே யைந்து விளங்கவணி
     யேவற் குணத்தா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; தேவர்களும் காண்பதற்கரிய ஆனந்த தாண்டவம் செய்கின்ற பெருமானாகிய நீவிர், பொருந்த அமைந்த அறுகு மாலையை அணிந்த சடையை யுடையராகின்றீர் என்று சொன்னேனாக, தாவுமாறு நாற் குகுவின்கண் ஐவகை விளங்க அணிகின்ற அமைதியான குணமுடையளாவாய் என உரைக்கின்றார்; இதுதான் என்னே எ.று.

     மக்கள், முனிவர் ஆகியோரின் மேம்பட்டவர் தேவராதலால் “தேவர்க்கரிய திருத்தாண்டவம்” என்றும், உலகுயிர்கள் ஆனந்தம் எய்தும்பொருட்டுச் செய்யப்படுவது பற்றி “ஆனந்தத் திருத்தாண்டவம்” என்றும் சிறப்பிக்கின்றார். அறுகு என்பதை குகுகு குகுகு எனக் குவ்வெழுத்து ஆறையும் தந்து காட்டியது ஒரு நயம். இருட்காலத்தைத் குகு என்னும் சொல்லும் இருளைக் கு என்று சொல்லும் குறிப்பன. “கூடின் அமாவாசை பதினான் கிறுதிக் கூறதனில், கூடுமதற்குப் பெயர் “குகு” (மகாசிவராத்திரி, கற்பம் 13 அமாவாசை யிருளை முற்றிருள், இரட்டையிருள் என்று கூறுவதுண்டு) இரட்டையிருள் என்பதை, இருளைக் குறிக்கும் குவ்வெழுத்தைக் குகு என இரட்டுற எழுதிக் காட்டுவது முன்னையோர் வழக்கு. இரண்டிரண்டாக நால் குகு எழுதி வினைத் தொகையாக்கி நாலும் இருள் என்று பொருள் குறித்து இளமகளிரின் கருங் கூந்தலைப் பாராட்டுவது இடைக்காலக் கவிஞர் இயல்பு. தலையிற்றோன்றிக் கழுத்தையும் முதுகையும் தீண்டாது இடையில் தாவி வீழ்வது பற்றித் “தாவக் குகுகு குகுகு குகு” என்று கூந்தலைக் குறித்து, ஐம்பாலாக, முடி, கொண்டை, பற்றி “ஐந்து விளங்க அணி குணத்தாய்” என்று உரைக்கின்றார். பிறரை ஏவுதல் இல்லாத அமைதியான குணம் ஏவற் குணம்.

     இதன்கண், முடியில் அறுகு அணி வேணி யுடையீர் என்றாட்கு முடியில் நாற்குகுவில் ஐந்து விளங்க அணி குணத்தாய் எனக் கூறுகின்றார் என்பதாம்.

     (159)