1931. கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர்
குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
னொன்றப் பெருங்கோ ளென்மீது
முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
நன்றப் படியேற் கோளிலையா
நகரு முடையே நங்காய்நீ
யின்றச் சுறலென் னென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடி; சேடி; கொன்றைக் கன்னி சூடிய பிச்சைத்தேவரே, கொடுங்கோ ளூரைக் குறித்த இடமாகக் காட்டினீர்; யான் அங்கு வருதற்கு அஞ்சுகிறேன்; என் மீதும் நன்கு ஒன்றுமாறு பெரிய கோளுரைப்பார் உண்டென உணர்ந்தே அஞ்சுகிறேன் என்றேனாக, நங்காய், நன்று, அப்படியாயின் கோளில்லாத நகரும் யாம் உடையேம்; இப் பொழுது நீ அஞ்சுதல் வேண்டா என்று கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
தலையிற் சூடும் கொன்றை மலர், கொன்றைக் கண்ணி எனப்படும். மார்பிற் சூடப்படுங்கால் கொன்றை மாலையாம், கொடுங் கோளூர், சேர நாட்டில் சிவன் கோயில் கொண்டிருக்கும் ஊர். கொடுங்கோளூர் என்னும் தொடர், கொடுமையாகக் கோள் பல உரைக்கும் ஊர் என்றும் பொருள்படும். சேர நாட்டிற் காணும்போது, கடல்நீர் மிக்க வளைவுறக் கொண்டிருக்கும் ஊர் என்று பொருள் கொள்விக்கிறது. கொடுங் கோளூரைக் குறித்துதுரைத்தது, அங்கு வருக எனக் குறியிடம் கூறியது போன்றமையின், அங்கு வருதற்கு அஞ்சுவல் யான் என்று உரைக்கின்றாள். அஞ்சுதற்குக் காரணம் பெரிய கோளுரைகளைப் பொருந்த எடுத்தோதி அலர் செய்வார் பலர் உளர் என்று கருதுகின்றேன் என்பாளாய், “ஒன்றப் பெருங்கோள் என்மீதும் உரைப்பார் உண்டென்று” என மொழிகின்றாள். அப்படியாயின் 'கோளிலி' என்றோர் நகரம் எமக்கு உளது; அங்குக் கோளுரைப்பார் இல்லை; அங்கே வா என்பாராய், “கோளிலியாம் நகரும் உடையேம் நீ அச்சுறல்” என உரைக்கின்றார். அஞ்சற்க என்பார் “அச்சுறல்” என்கின்றார்.
இதன்கண், கொடுங்கோளூர் குறித்தீர்; பெருங்கோள் என்மீதும் உரைப்பார் உண்டென்றுணர்ந்து, வருதற்கு அஞ்சுவல் என்றாட்குக் கோளிலியாம் நகரும் உடையேம் அச்சுறல் என உரைக்கின்றாராம். (160)
|