1932.

     புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர்
          புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
     முரியும் புலித்தோ லுடையீர்போ
          லுறுதற் கியலு மோவென்றேன்
     றிரியும் புலியூ ரன்றுநின்போல்
          றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
     யிரியும் புலியூ ரென்கின்றா
          ரிதுதான் சேடி ரென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; புரிபுரியாகத் திரண்டமைந்த சடையை யுடைய தேவரீர் விரும்பி யுறைவது புலியூர் என்பதாயின், உரித்த புலித்தோலை யுடையாக அணிந்த உம்மைப்போல் எம்போன்றவர்க்கு இருத்தற்கு இயலுமோ என்று கேட்டேனாக, எமது புலியூர் அவரவர்க் கேற்றவாறு வேறுபடுவதுதன்று; உன்னைப் போன்ற மகளிரைக் கண்டால் அஞ்சி நீங்கும் புலியூர் என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     புரிகள் பல சேர்ந்து திரள்வது சடையாதலின் “புரியும் சடையீர்” என வுரைக்கின்றார். புலியூரிற் சிவனுக்கு மூலத்தானர் என்றே பெயர் கூறுவர். அப்பொருண்மை தோன்றவே “அமர்ந்திடுமூர் புலியூர்” எனப் பலரும் கூறுகின்றனர். முடியிற் சடையுடையராவது போல இடையில் புலித்தோலை உடையாக அணிவதைச் சிறப்பித்து “உரியும் புலித்தோல் உடையீர்;” புலியூர்க்கண் எம்மைப் போலும் மான் நிகர்க்கும் மகளிர் உறைவது அரிது; புலியுமானும் ஒன்றியுறைவ தின்மை பற்றி “எம்போல்வார்க் குறுதற் கியலுமோ என்றேன்” என மொழிகின்றாள். விடை கூறலுறும் பிச்சைத்தேவர், எமது புலியூர் கடிய புலிகள் உலவும் ஊரன்று; மகளிரைக் கண்டால் தவயோகத்தில் ஒன்றியிருக்கும் தமது மனம் காமவேட்கையுற்றுத் திரிந்து கெடும் என்று அஞ்சி யலமரும் புலிக்கால் முனிவர் உறையும் ஊர். வலியுடையார்க்கு இனிமையும், அஃது இல்லார்க்கு அருமையும் நல்கி, இயல்புதிரியும் ஊரன்று எமது புலியூர். தமது நலம் விற்கும் மகளிரைக் கண்டால் அஞ்சி யகன்று நீங்கும் இயல்பிற் றென்று கூறலுமாம். மிகப் பழைய காலத்தில் சோழர்கள் இப்பகுதியில் காவல் மேற்கொண்டு காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிய நாளில், புலிமிக்கு இருந்தமை குறித்து, இது புலியூராயிற்று என்பது உண்மை வரலாறு. தில்லைப்பகுதியில் புலிக்காலை யுடைய முனிவர் தவமிருந்து சிவனை வழிபட்டனர்; அதனால் இது புலியூராயிற் றென்பது வரலாற்றை மறைக்கும் புராணக் கதை.

     இதன்கண், நீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனின், எம்போல்வார் உறுதற் கியலுமோ என்றாட்குப், புலி திரியும் ஊரன்று, தெரிவையரைக் கண்டு அஞ்சியோடும் புலியூர் என்றாராம்.

     (161)