1934. மணங்கொ ளிதழிச் சடையீர்நீர்
வாழும் பதியா தென்றேனின்
குணங்கொண் மொழிகேட் டோரளவு
குறைந்த குயிலாம் பதியென்றா
ரணங்கின் மறையூ ராமென்றேன்
னஃதன் றருளோத் தூரிஃது
மிணங்க வுடையே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடையையுடைய தேவராகிய நீவிர் வாழும் பதி யாது என்று கேட்டேனாக, நற்குணம் விளங்கும் நின் சொற்களைக் கேட்டதனால், ஒரு மாத்திரை குறைந்த குயிலின் பெயர் எமது பதியாம் என்று சொன்னார்; அணங்காகிய தேவி காலோத்தரமாகிய ஆகமம் சொன்ன தேவீச்சுரமாம் என்று நான் உரைத்தேன்; அஃதன்று, மறையூராவது அருள் வழங்கும் ஓத்தூர்; அதனையும் யாம் இசைந்த இடமாகக் கொண்டுளோம் என உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
இதழி - கொன்றை. நல்லார் தீயார் என்பது அவரவர் சொல்லால் விளங்கி விடுவதுபற்றி, “குணங்கொள் நின் மொழி கேட்டு” என்று சொன்னார். மொழியிசை குயிலை நினைப்பித்தலின், அதன் பெயரோடு இயைபுடைய தமது பதியின் பெயரைக் கூறுகின்றவர், “ஓரளவு குறைந்த குயில் பதியாம்” என மொழிகின்றார். அளவு - மாத்திரை. 'காளகண்டம்' என்ற குயிலின் பெயர் ஒரு மாத்திரை குறைந்து களகண்டம், களகண்டீசம் என வழங்குவது, “பார்த்தலத் தொளிகள் பரப்பு கண்டீசம்” (புராண வர. 46) என்று தணிகைப் புராணம் குறிக்கின்றது. மறைமொழி கேட்டுத் தேவி வழிபட்ட தேவீச்சுரம் என்று கருதி, யான் “அணங்கின் மறையூர் அப்பதியாம்” என்றேனாக, அவர், “அஃது அன்று” என மறுத்து, இறைவன் வேதத்தை அருளிய ஓத்தூர் என்பாராய், “அருள் ஓத்தூர் இஃதும் இணங்கவுடையேம்” என்று கூறுகின்றார்.
இதன்கண், நீவிர் வாழும் பதி யாதென்றாட்கு ஓரளவு குறைந்த குயிலாம் பதி யென்றாராக, யான் அஃது அணங்கின் மறையூராம் என்றேன்; அஃது அன்று என மறுத்து, ஓத்தூர், இஃது இணங்க வுடையேம் என்று மொழிகின்றார் என்பதாம். (163)
|