1935. ஆற்றுச் சடையா ரிவர்பலியென்
றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
சோற்றுத் துறையென் றார்நுமக்குச்
சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
றோற்றுத் திரிவே மன்றுநின்போற்
சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
வேற்றுத் திரியே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: கங்கை யாற்றைச் சடையிலே தரித்தவராகிய இவர் பலி வேண்டி வந்தாராக, உம்முடைய ஊர் யாது என அவரைக் கேட்க, சோற்றுத்துறை என்று ஊர்ப் பெயரை யுரைத்தார்; அதுவாயின் உமக்குச் சோற்றுக்கு வறுமை வருவானேன்; சொல்லுமின் என்று கேட்டேன்; அதற்கு அவர், உன்னைப்போல் சொல்லுக்குத் தோற்றுத் திரிவேமல்லேம்; சொல்லும் கருப்பு என்று உலகினர் சொல்லும் சொல்லை ஏற்றுத் திரியமாட்டேம் என்று கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
கங்கையாறு தங்குகின்ற சடையாதலால், ஆற்றுச் சடையார் என்றும், பிச்சைத் தேவராய்ப் பலிவேண்டி வந்தமை பற்றி “பலி யென்றடைந்தார்” என்றும் ஓதுகின்றாள். நுமது ஊர் யாது என வினவினாட்குத் தேவர் கூறிய விடை “சோற்றுத்துறை” என்பது. சோற்றுத்துறையை உடையவர்க்குச் சோற்றுக்கு வறுமையுண்டாக வழியில்லையே; இவர் சோற்றுப்பலி வேண்டி வருவதன் கருத்து வேறாதல் வேண்டுமென எண்ணி வினவலுற்று, “நுமக்குச் சோற்றுக் கருப்பு ஏன்” என்று கேட்கின்றாள். கருப்பு - பஞ்சம்; வறுமையுமாம். அது கேட்டு வெகுள்வார் போன்று, உன்னைப்போல் தோல்வியைத் தாங்கித் திரிபவர் யாமல்ல; உலகத்தவர் உம்மை நோக்கி உமக்கு வாய்ச் சொல்லும் கருப்பு என்கின்றார்கள். காரணம் பலகூறும் பான்மையின்றிச் சிலவே மிழற்றும் இயல்பு உடையீர்; இதனின் விலகும் திறமின்மையின் இக்கூற்றை ஏற்றுத் திரிகின்றீர்; எமக்கு அது ஒல்லாது என்பாராய், “தோற்றுத் திரியேம்” என்றதோடு அமையாது, “ஏற்றுத் திரியேம்” என வுரைக்கின்றார். கருப்பு என்பதைக் கரும்பு என்பதன் விகாரமாகக் கொண்டு, இளமகளிரின் மேனியேயன்றி மொழியும் கரும்பு எனப் பாராட்டிய குறிப்பும் காண்க.
இதன்கண், நுமது ஊர் யாது என்றாட்குச் சோற்றுத் துறையென்பதும், அது கேட்கும் நங்கை நுமக்குச் சோற்றுக் கருப்பேன் என்பதும், கருப்பென்ற சொல்லைப் பற்றிகொண்டு சொல்லும் கருப்பென்று உலகு இயம்ப அதனை ஏற்றுத் திரியேம் என்று தேவர் கூறுவதும் அமைந்துள்ளது. (164)
|