1941.

     மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
          மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
     விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
          வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
     புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
          பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
     கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
          கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.

உரை:

     கண்ணாளனே, ஒளிர்கின்ற தாமரை போன்ற கண்களையுடையவனே, நான் மண்ணுலகை யாளும் வேந்தர் வாழ்வையோ, மற்றைய மக்களைப் போலப் பொருட் பற்றுக்கொண்டு இறப்பதையோ, விண்ணவர் உலகை யாள்கின்ற மேலான போக வாழ்வையோ விரும்புகின்றேனில்லை; வித்தகனாகிய உனது திருவருளொன்றையே வேண்டுகின்றேன்; துன்பங்களால் மனம் புண்பட்டுள்ளேன்; யான் செய்துள்ள பொய் நிறைந்த குற்றங்களைப் பொறுத்தருள்க; அருளாமற் கைவிடுவாயாயின், மக்களிற் கடைப்பட்டவனாகிய யான் யாது செய்வேன். எ.று.

     உலகியற் செல்வங்களைக் காட்டியும் கண்டும் உடல் வாழ்க்கையை இனிதுய்க்கும் கண்போல, உலகில் வாழ்வருளும் தலைவனைக் கண்ணாளன் என்பது வழக்கு. இம்மை மறுமை அம்மையாகிய வாழ்வுகளில் உயிரினத்தைச் செலுத்தி யுய்விப்பது காரணமாக, இராமபிரானைக் “கண்ணாளன்” என்று கூறுகின்றார். அழகொளி திகழும் தாமரை மலர் போன்ற கண்களை யுடையனாதலின், “சுடர்க் கமலக் கண்ணா” என்று துதிக்கின்றார். “தயரதன் புதல்வ னென்பார் தாமரைக் கண்ணன் என்பார்” (கார்முகப்) என்று கம்பர் உரைப்பது காண்க. மண்ணாளும் மன்னரது வாழ்வும், பொருட்பற்று நிறைந்த செல்வர்கள் வாழ்வும், விண்ணுலகிற் பெறும் இந்திரபோக வாழ்வும், மனக்கவலை மிகுத்து நிலையுதலின்றிக் கெடுவனவாதலால், “மண்ணாளா, நின்றவர்தம் வாழ்வும் வேண்டேன், மற்றவர்போல் பற்றடைந்து மாள மாட்டேன், விண்ணாளா நின்ற வொரு மேன்மை வேண்டேன்” என்று மொழிகின்றார். பற்று மிக்கவழிப் பேராசை தோன்றி நோயும் அலைச்சலும் உண்டாக்கித் துன்புற்று இறக்கச் செய்வதால் “பற்றடைந்து மாள மாட்டேன்” என வுரைக்கின்றார். மண்ணுலகிலும் மேலதாய், தேவர்க் கெல்லாம் தலைமை யியல்புடைதாகலின், விண்ணாட்சியை “மேன்மை” என விளம்புகின்றார். வித்தகன் - வல்லவன். உயர்ந்தவரிடமே யுளதாவ தென்பது பற்றித் “திருவருளே வேண்டி நின்றேன்” என்று தெரிவிக்கின்றார். “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள” (குறள்) என்று திருவள்ளுவர் கூறுவதறிக. வாழ்க்கையில் பொருளும் இன்பமும் கருதிப் பலப்பல நினைந்தும் முயன்றும் நோயும் துன்பமுமுற்று மனவேதனை மிகுந்தேன் என்பாராய், “புண்ணாளா நின்ற மனமுடையேன்” என்றும், அதனால் பொய்யே எண்ணியும் பொய்ம்மையே செய்து முள்ளேன்; இவை யாவும் நீ அறிந்த வையாதலால், நீயன்றி என்னைப் பொறுத்தருளுவார் இல்லை என்று சொல்லுவாராய் “செய்த பொய் யனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய்” என்றும் உரைக்கின்றார். இவ்வாற்றால் நான் எல்லாரினும் கீழ்மையுற்றேன் என்றற்குக் “கடையனேன் எனவும், நீ கைவிடின் எனக்கு உய்தி யில்லை என்று கட்டுரைக்கலுற்று, “என்னைக் கைவிடில் என்செய்வேனே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் மனப்புண்பட்டு வருந்துகின்ற எனக்கு, நின் திருவருளே மருந்தென மொழிந்தவாறாம்.

     (3)