1942.

     தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
          சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
     வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
          வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
     இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
          கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
     செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
          திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.

உரை:

     பகைமைச் செயல்களை யுடையவர்களாகிய அரக்கரினத்தை அழித்த வெற்றியையுடைய சிங்கமே, எங்கட்குக் குலதெய்வமே, கொடிய தீவினைத் தொடர்பை அறுத்தருள்கின்ற இராமன் என்ற பெயர் தாங்கிய பெரிய சுடரொளியே, இவ்வுலக மென்னும் விடயமாகிய காட்டில், வினையை யுடையவனாகிய யான் அகப்பட்டு, ஐம்புலன்களாகிய கள்வர்களின் தாக்குதலுக்கு இலக்காய் விட்டேன்; எனக்குத் துணையாவார் ஒருவரும் இல்லேன்; ஐயோ, வேறே செய்தற்குரிய தொன்றை அறிகிலேன்; எந்தையே, நின்னுடைய திருவுள்ளத்தில் என்னைக் கொள்ளாயாயின், யான் செய்வது என்னோ. எ.று.

     தெவ்வினை - பகைவர் செய்யும் தீச்செயல். உயிர்கட்கு ஆகாத தீமையே புரிந்தொழுகினமையால், அரக்கர்களைத் “தெவ்வினையார்” என வுரைக்கிறார். செறல் - அழித்தல். சிங்கம் போல்வானைச் சிங்க மென்பது மரபு. குல தெய்வம் - குலத்தவர் சிறப்பாக வழிபடும் தெய்வம். தன்னைச் செய்த உயிரை விடாது தொடர்ந்து துன்பம் எய்துவிப்பதால், வினையை வெவ்வினை யென விளம்புகிறார். இராமனது திருநாமம் வினையாகிய பகையைக் கெடுக்கும் வன்மையும் பெருமையும் உடைய தென்பதால், “வெவ்வினை தீர்த்தருள்கின்ற இராமநாமம்” என்றும், ஞானப் பேரொளி படைத்ததாகலின், “வியன் சுடரே” என்றும் இயம்புகின்றார். கண் முதலிய பொறிகட்குக் காணப்படும் பொருள் விடயம் எனப்படும். சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்ற வைந்தையும் உடைய பொருள்கள் விடயங்களாம். இவை அனைத்தும் கூடியது உலகமாகலின், “உலகவிடய” மென்றும், அதனைக் காடாக உருவகம் செய்தலால் “விடயக்காடு” என்றும் குறிக்கின்றார். இவற்றின்மேற் செல்லும் ஆசைக்கு இடமாகும் ஒளி ஓசை முதலாய ஐந்தும் புலன்களாகும். உலகு இடமாக இப் புலனைந்தும் இயங்குவதால் “விடயக் காட்டில் உலவும் கள்வர்” எனக் கூறுகின்றார். மெய்கண்டார் இவற்றை “ஐம்புல வேடர்” (சிவ. ஞா. போ.) என்பர். உலகமாகிய காட்டிற் பிறந்து வாழ்தலால், “விடயக்காட்டில் இவ்வினையேன் அகப்பட்டேன்” எனவும், புலன்கள் மேற் செல்லும் ஆசைகள் உயிரைத் தாக்கி அலைத்தலின், “புலனாம் கள்வர்க்கு இலக்கானேன்” எனவும் இயம்புகின்றார். பொறி வாயில் ஐந்தினையும் ஒடுக்குதற்குத் துணை காணேன் என்பார், “துணை யொன்றும் இல்லேன்” என்றும், இல்லாமையால் ஏங்குவது புலப்பட, “அந்தோ” என்றும் அவலிக்கின்றார். துணை யின்மையால் செய்வினை தெரியாமை விளங்க, “செய்வினை ஒன்றறியேன்” என்று இசைக்கின்றார்.

     இதனாற் பொறி புலன்களை அடக்கித் திருவருட் பேற்றை எய்தும் நெறியறியாமை கூறியவாறாம்.

     (4)