1943.

     வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
          மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
     தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
          தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
     ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
          குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
     கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
          காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.

உரை:

     வானத்துலவும் கரிய மேகம் போன்றவனே! அது சொரியும் மழை போன்றவனே! நீல மணியிடத் தெழும் கொழுஞ் சுடர் போன்றவனே! மருந்தே! பெருமை பொருந்திய தேனின் மிக்க சுவையானவனே! இராமன் என்னும் நாமத்தையுடைய தெய்வமே! நின்னுடைய புகழ் நலத்தைத் தெளிய உணர்ந்தோதுதல் இல்லாத ஊன் உண்ணும் புலைநாற்றமுடைய வாயை யுடையவரான கீழ் மக்களிடத்தே சென்று, அங்கு அவர்க்கு ஏவல் செய்து உழல்கின்றேன்; வேறு செய்திறம் ஒன்றும் உணர்ந்தேனில்லை. அந்தோ, காடு போன்ற குடும்பத் துயர்க்கு இலக்காக என்னைக் காட்டிவிட்டாய்; என்னே! நின் திருவருள் இது தானோ! எ.று.

     வானில் உலாவுவது பற்றிக் கரியநிற மேகத்தை, “வான் வண்ணக் கருமுகில்” என்று வனைந்துரைக்கின்றார். அந்த மேகத்தின் பயன் மழையாதலின், “மழையே” என்கின்றார். நீல மணியினிடத்து ஒளிக்கதிர் எழுவது உண்மையின், “நீல மணிவண்ணக் கொழுஞ் சுடரே” என்கின்றார். மணியின் சுடரொளியினும் இராமனது திருமேனியின் ஒளி மிக்கிருப்பது பற்றிக் “கொழுஞ் சுடரே” என்று தெரிந்துரைக்கின்றார். இனிப்புச் சுவையில் தேன் தலைசிறந்ததெனினும் நாட்படின் ஓரி பாயும் சிறுமையுடைத்தாதலின், அதனின் நீக்குதற்கு, “வானத் தேன்வண்ணச் செழுஞ் சுவையே” என்று சிறப்பிக்கின்றார். ஓதாதவரின் கீழ்மை யுணர்த்துதற்கு அவர்களை “ஊன் வண்ணப் புலை வாயார்” என இழித்து உரைக்கின்றார். “உழைக்கின்றேன்” என்றவிடத்து, உழைத்தல் சிறுமை யுற்றுக் குற்றேவல் செய்தல் என்னும் பொருட்டு. கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற் செல்வோர் போலக் குடும்ப வாழ்விலும் நீங்காத் துன்பம் உண்மைபற்றிக் “கான் வண்ணக் குடும்பம்” என உரைக்கின்றார்.

     இதனால், குடும்பத் தொல்லைக்கு அஞ்சி, இராமனது திருவருளை வேண்டியவாறாம்.

     (5)