1946. கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
உரை: வாழ்க்கையில் உண்டாகும் அவலக் கவலைகளால் கற்போன்ற வன்மையான மனமுடைய செல்வர்களிடம் சென்று புறக்கணிக்கப்பட்டுக் கண்களில் நீர் வடிய வருத்தமடைகின்றேன்; எனது உள்ளத்தில் எழுந்தருளும் நீ, எல்லாவற்றையும் இனிதறிந்திருக்கின்றாய்; எம் பெருமானே, நீ சிறிதும் என்பால் இரக்கம் கொள்கிறாயில்லையே; இஃது என்னே; தீவினையே யுடையவனாயினும், என்னைக் காப்பது புண்ணிய மூர்த்தியாகிய உன் திருவருட்கு நல்ல புகழ் விளைக்கு மன்றோ? இருண்ட துன்பக் கடலினின்றும் என்னைக் கரையேற்றாமல், அதனுள் அழுத்திக் கெட விடுவாயானால், நான் பொறுக்க மாட்டாமல் இறப்பேன்; நினைக்குப் பழி யுண்டாகும். எ.று.
இரக்க மில்லாத செல்வரை வன்மனத்த ரென்கின்றாராயினும், வன்மையை விளக்குதற்குக், “கல்லாய வன்மனத்தர்” என்று கூறுகின்றார். அவர்களின் முன்னே சென்று மறுக்கப்பட்டு மனத்தின்கண் துயரமுற்றுக் கண்களில் நீர் பெருகத் திரும்பினேன் என்பாராய், “வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன்” எனத் தெரிவிக்கின்றார். அதற்குக் காரணம் வாழ்வு தரும் துன்பம் என்றற்குக் “கவலை வாழ்வு” எனக் குறிக்கின்றார். இறைவனாதலால் நீ எனக்கு உள்ளிருந்து அறிகின்றவனாதலால், நான் எடுத்துரைப்பது மிகையாம் என்பார், “எல்லாம் உள்ளிருந்து அறிந்தாய்” எனவும், அறிந்திருந்தும் என் துன்பத்தைப் போக்காமையால் நீ இரக்கம் கொள்ளவில்லை என்று தெரிகிறது; இதனை என்னென்பேன் என்பார், “சற்றும் இரங்கிலை எம்பெருமானே” எனவும், “என்னே என்னே” எனவும் இயம்புகிறார். இரங்காமைக்கு ஏது எனது தீவினையாகலாம்; ஆயினும் பொறுத்தருளுதல் புண்ணியப் பொருளாகிய உனக்கு நல்ல புகழையே தருவதாம் என்று கூறலுற்று, “பொல்லாத வெவ்வினையே னெனினும் என்னைப் புண்ணியனே பொறுப்பது அருட் புகழ்ச்சி யன்றோ” என்று புகல்கின்றார். தீவினையின் மிகுதி புலப்படுத்த “வெவ்வினை” என்றும், அதன் பொல்லாங்கு விளங்கப் “பொல்லாத” என்றும் விளக்குகிறார். புரத்தல் - காத்தல். துன்பம் போந்து தாக்கு மிடத்து அறிவு ஒளி மழுங்கி இருண்டொழிதலால், “அல்லார்ந்த துயர்க் கடல்” என்று காட்டி, துன்ப மிகுதிக்கு ஆற்றாமல் இறப்பது ஆண்டவனாகிய உனக்குச் சிறப்பளிக்காது என்றற்குப் “பழி நின்பால் ஆக்குவேனே” என வுரைக்கின்றார்.
இதனால், துன்பம் பொறாது நான் இறப்பேனாயின், நின் புகழ்க்குப் பழியாம் என்றாராம். (8)
|