1947.

     மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
          மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
     ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
          அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே
     பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
          புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
     மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
          வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.

உரை:

     இருள் செய்யும் வஞ்சம் புரியும் செல்வர் மனைவாயிலை யடைந்து மறுக்கப்பட்டு, மனம் சோர்வுற்று நான் படுகின்ற வருத்த மெல்லாவற்றையும், என் மனத்தில் எழுந்தருள்கிற ஐயனே, நீ அறிய மாட்டாயா? அறியவில்லை யென்றால் வேறே யாவர் அறிகுவார்; பொய் மிக்க குணஞ் செயல் உடையவனாயினும் என்னைப் புறம் போகவிடுவது உனக்கு அழகாகாது; மெய்ம்மை யுடையவனே, அந்நாளில் ஞானமருளி என்னை ஆண்டருளிய நீ, இந்நாளில் வெறுத்து விலக்குவாயாயின், யான் எங்கே சென்று உய்வேன்? எ.று.

     நெஞ்சில் இருள் படிந்தவர்க்கே வஞ்ச நினைவுகள் பொருந்தியிருக்கு மாதலால்,. அவற்றாற் பொருள் செய்த செல்வர் மனை யடைந்தால் உட்புகல் செல்லாதாதலால், “மையான நெஞ்சகத்தார் வாயில் சார்ந்து” என்றும், எண்ணிச் சென்ற உதவி அவரால் மறுக்கப்பட்டு மனம் சோர்வுற்று வருந்திய திறத்தை “மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தமெல்லாம்” என்றும் எடுத்தோதுகின்றார். என் வருத்தங்களை எஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டுமோ? என் உள்ளத்தில் எழுந்தருளுகிற நீ அவற்றைச் சிறிதும் அறியா திருப்பாயோ? அறியவில்லை எனின், வேறு யாவரால் அறிய முடியும் என்பாராய், “உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும் அறியாயோ? அறியாயேல் அறிவார் யாரே” என்று கூறுகின்றார். பொய்ம்மையிருள் நிறைந்தமையால் காண்டல் அரிதாயிற் றென்பாயேல், அதனை நீக்கி அருளொளி பரப்பி ஆட்கொள்ளாமல் புறத்தே என்னைத் தள்ளுதல் உன் திருவருட்கு அழகாகா தென்றற்கு “பொய்யான தன்மையினே னெனினும் என்னைப் புறம் விடுத்தல் அழகேயோ” என மொழிகின்றார். உன்னைத் தெரிந்து வழிபடுதற் கேற்ப அந்நாள் அருள் ஞானம் வழங்கி ஆண்டு கொண்ட நீ இந்நாளில் கைவிடின் யான் யாது செய்வேன் எனக் கையறவு படுவதைத் தெரிவிக்கலுற்று, “மெய்யாவென்றனை யந்நாள் ஆண்டாய் இந்நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே” என இயம்புகின்றார். மேவுதல், ஈண்டுச் செல்லுதல் மேற்று.

     இதனால், மனத்தின்கண் எழுந்தருளும் நீ, அந்நாள் என்னை ஒரு பொருளாக எண்ணி ஆண்டருளி, இந்நாள் பொருளல்ல வென வெறுத்தொதுக்குவது கூடாது என விண்ணப்பித்தவாறாம்.

     (9)