195.

    வல்லிருட் பவம்தீர் மருந்தெனும் நினது
        மலரடி மனமுற வழுத்தாப்
    புல்லர்தம் மிடமிப் பொய்யனேன் புகுதல்
        பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஒல்லையி லெனைமீட் டுன்னடி யவர்பால்
        உற்று வாழ்ந்திடச் செயி னுய்வேன்
    சல்ல மற்றவர்கட் கருடரும் பொருளே
        தணிகை வாழ் சரவண பவனே.

உரை:

     துன்ப மில்லாதவர்க்கு நல்லருள் வழங்கும் பரம்பொருளாகிய தணிகைமலைச் சரவண பவனே, வலிய அறியாமை நிறைந்த பிறவி நோயை நீக்கும் மருந்து எனப்படும் உன்னுடைய மலர் போன்ற திருவடியை மனத்தால் நினைந்து தொழாத அற்பரிடம் பொய்யனாகிய யான் சென்று ஒன்று வேண்டி வருந்தும் துன்பத்தை யான் பொறுக்க மாட்டாதவனாகின்றேன்; ஆதலால் விரைவில் என்னை வறுமைத் துன்பத்திலிருந்து மீட்டு உன்னுடைய அடியவராகிய அருட் செல்வரை யடைந்து வாழச் செய்வாயாயின் யான் உய்தி பெறுவேன், எ. று.

     சல்லம் - பன்றி முள்ளாற் குத்துவது போலும் துனபம்; கடன்தொல்லைகளைச் சல்லம் என்பது உலக வழக்கு. எவரிடத்தும் கடன் படாது வாழ்பவரைச் சல்ல மற்றவர் என்பர். பொருள் - பரம்பொருள். நீக்குதற்கரிய பேரிருளைச் செய்வது பற்றி மலவிருளை “வல்லிருள்” என்றும், அது காரணமாகப் பிறவி நோய் தொடர்வதலால், அதனை நீக்கும் திருவருள் இன்ப நிலையமாவது பற்றி முருகன் திருவடியைப் “பவம்தீர் மருந்தெனும் நினது மலரடி” என்றும், அதனை வணங்கி வழிபடுவது நேரிய செயலாகச் செய்யாத கீழ் மக்களைப் “புல்லர்” என்றும் புகல்கின்றார். புல்லரைச் சேர்வோர் புல்லிய வஞ்சரும் பொய்யருமாதலின், “புல்லர் தம்மிடம் இப்பொய்யனேன் புகுதல்” எனவும், புகுபவர் மிகவும் வஞ்சிக்கப்பட்டு அல்லலுறுவது தோன்றப் “பொறுக்கிலன் பொறுக்கிலன்” எனவும் இயம்புகின்றார். புல்லர் சார்பு பொய்ம்மை போக்காமல் சூதும் வாதும் பொய்யும் களவும் பெருகுவிக்குமாதலால் விரைந்து ஆட்படுத்துக என்பாராய், “ஒல்லையின் எனைமீட்டு உன்னடியவர் பால் உற்று வாழ்ந்திடச் செயின்” என்றும், செய்த வழிப் பொய் முதலிய குற்றமின்றி இனிது வாழ்வேன் என்பாராய், “வாழ்ந்திடச் செயின் உய்வேன்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், திருவடி போற்றாத புல்லரைச் சேர்ந்து துன்புறச் செய்தல் வேண்டா என முறையிட்டவாறாம்.

     (5)