1952.

     இளங்கொடி தனைக்கொண் டேகும்
          இராவணன் தனைய ழித்தே
     களங்கமில் விபீட ணர்க்குக்
          கனவர சளித்தாய் போற்றி
     துளங்குமா தவத்தோர் உற்ற
          துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
     விளங்குநல் எவ்வு ளூர்வாழ்
          வீரராக கவனே போற்றி.

உரை:

     மெல்லிய கொடி போல்பவளாகிய சீதையைக் கவர்ந்து கொண்டு சென்ற இராவணனை வீழ்த்திக் கொன்று, குற்றமில்லாத விபீடணனுக்குப் பெருமை பொருந்திய இலங்கை யரசை யளித்தவனே, போற்றி; நிலை யழிந்த முனிவர்கட்கு உற்ற துன்பங்கள் அத்தனையும் போக்கியவனே, போற்றி; வளத்தால் விளங்குகின்ற திருவெவ்வுளூரில் எழுந்தருளும் வீரராகவப் பெருமானே, போற்றி. எ.று.

     இளங்கொடி; அன்மொழித் தொகை. மென்மை பற்றிச் சீதையை “இளங்கொடி” என்கின்றார். மாசு மறுவற்ற மனமுடையனாதலின், “களங்கமில் விபீடணன்” எனப் புகழ்கின்றார். இலங்கை யரசு பேரரசாக விளங்கினமை பற்றிக் “கனவரசு” என்று சிறப்பிக்கின்றார். இராவணனைத் தலைவனாகக் கொண்ட அரக்கரால் தவங் கெட்டு வருந்திய முனிவர்களை “துளங்கும் மாதவத்தோர்” என்றும், அரக்கர் இனத்தை வேரோடு தொலைத்தமையால், “மாதவத்தோர் துயரெலாம் தவிர்த்தாய்” என்றும் கூறுகின்றார். துளங்குதல் - நிலைகுலைந்து அசைதல். விளங்குதல் - பல்வகை வளங்களால் மேன்மை பெறுதல்.

     (4)