1958. மனமெலி யாமல் பிணியடை
யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
சினநிலை யாமல் உடல்சலி யாமல்
சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய்
அழகுசெய் காஞ்சன உடையாய்
இனமகள் சென்னை இசைதுலுக் காணத்
திரேணுகை எனும்ஒரு திருவே.
உரை: அன்னம் போன்ற நடையையும், அழகிய துடிபோன்ற இடையையும், வனப்புற்ற பொன்னாடையையும் உடைய தாயே! இனம் சூழ வாழ்வார் உறையும் சென்னையிலுள்ள துலுக்காணம் என்ற இரேணுகையாகிய திருவருட் செல்வமே! மனம் தளர்ச்சி யடையாமலும், நோய் முதலியன தாக்காமலும், வஞ்சகர் கூட்டத்தைச் சேராமலும், எழுகிற சினம் சிறிது போதில் நீங்கிடவும், உடம்பு நலிவுறாமலும் இருக்கச் சிறியவனாகிய எனக்கு உன் திருவருளை மனம் மகிழ்ந்து செய்தருள்க. எ.று.
உயர்நிலை மகளிர்க்கு அன்னத்தின் நடையை உவமம் செய்வது மரபாதலின், “அனம் மகிழ் நடையாய்” என்று கூறுகிறார். அன்னம் - அன்னப்பறவை; நீர்ப்பறவை வகை; இஃது அனம் என வந்தது. துடி - உடுக்கை. அழகுற அமைந்த தென்றற்கு “அணி துடி” என்று சிறப்பிக்கின்றார். காஞ்சனவுடை - பொன்னிறப் பட்டாடை. காஞ்சனம் - பொன். வாழ்க்கைக்கு ஏற்ற வாய்ப்புடைமை பற்றி அவரவரும் தத்தம் இனத்தோடு சூழ வாழ்தல் விளங்க, “இனம் மகிழ் சென்னை” என்று உரைக்கின்றார். மனம் வன்மையின்றித் தளருமாயின் எச்செயலும் இனிது பயன்படாதாகலின், “மனம் மெலியாமல்” என்றும், நோய்கள் வாழ்வைத் துன்ப நிலையமாக்குவதால் “பிணியடையாமல்” என்றும் கூறுகிறார். வஞ்சகர் உறவு தீது செய்தற்கும் துன்ப முறுவதற்கும் ஏதுவாவது பற்றி, “வஞ்சகர்தமை மருவாமல்” என வேண்டுகிறார். சினம் - கோபம். இது தோன்றின் கணநேரமும் நிற்கவிடாமல் அடக்குதல் வேண்டும்; நெடிது நிற்குமாயின் துன்பமுறுதற்குரிய நினைவு சொல் செயல்களைத் தோற்றுவித்துக் கேடு விளைவிக்குமாதலால் சினம் நிலையாமையே வேண்டுகிறார். உழைப்பு மிகுதியாலும், ஆயுள் நீளுதலாலும் உடல் சலிப்புறல் இயல்பாதல் கண்டு, உடல் சலியாமல் உற மகிழ்ந்தருள்வாய் எனப் பரவுகின்றார்.
இதனால், மன சோர்வு பிணி முதலியன இன்றி இனிது வாழும் வாழ்வருள் வேண்டியவாறாம். (6)
|