196. கற்பிலா ரெனினு நினைந்திடி லருணின்
கருணையங் கழலடிக் கன்பாம்
பொற்பி லாதவர்பால் ஏழையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பிலே னெனினு மென்பிழை பொறுத்துன்
னடியர்பால் சேர்த்திடி னுய்வேன்
தற்பரா பரமே சற்குண மலையே
தணிகை வாழ் சரவண பவனே.
உரை: தனக்குத் தானே பரமும் அபரமுமாகிய பெருமானே, சற்குணமே யாகிய மலை போன்றவனே, தணிகைச் சரவண பவனே, நல்ல நூல்களைக் கல்லாதவராயினும் உன்னை நினைந்தொழுகுவாராயின் இன்னருள் வழங்குபவனாகிய உனது அருட்டிருவடிகட்கு அன்பு செய்யும் பொற்பு இல்லாதவரிடத்துக்கு ஏழைமையால் யான் சென்றடைந்து எய்தும் துன்பத்தைப் பொறுக்க மாட்டேனாகின்றேன்; அன்பில்லாதவனாயினும் எனது குற்றத்தைப் பொறுத்து உன் திருவடியார் கூட்டத்தில் சேர்த்து விடுவாயாயின் யான் நல்வாழ் வெய்துவேன், காண், எ. று.
தனி்முதற் பரம் பொருளாதலால் “தற்பராபரம்” என்கின்றார். திருமூலரும் “தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி” (2462) என்பது காண்க. தனக்குத் தானே மேலதும் கீழதுமாகும் மெய்ப்பொருள் என்பது கருத்து. சத்தாகிய குணங்கள் திரண்ட குன்று போல்பவன் என்றற்குச் “சற்குணமலை” என்று கூறுகின்றார். ஓரளவு கல்வி யுடையராயினும், கற்றற்குரிய மெய்ந் நூல்களைக் கற்றவரையே கற்றவரெனச் சிறப்பிப்பது மரபாதலால், அம் முறையிற் கல்லாதவரைக் “கற்பிலார்” எனக் குறிக்கின்றார். அப்பெற்றியோரும் முருகன் திருவடியைப் பேணி நினைந்து வழிபடுவராயின் அவனது திருவருள் பெருக எய்துவது பற்றிக் “கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்” செய்பவன் என்று புகழ்கின்றார். திருவடிக்கு அன்பில்லாதவர் யாவராயினும் திருவருள் விளக்கம் பெறார். என்றற்குக் “கருணையங் கழலடிக்கு அன்பாம் பொற்பிலார்” எனவும், அவர்பால் ஒன்று வேண்டிச் செல்லுதல் தீமையே தருதலால், “பொற்பிலாதவர்பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்” எனவும் புகன்று மொழிகின்றார். ஏழை - அறியாதவன், அன்பு, அற்பு என எதுகை பற்றி வலித்தது. அன்பில்லாதவராயினும் பிழை பொறுத்தாள்வது பெரியோர் இயல்பாதலால், “என் பிழை பொறுத்து உன்னடியவர்பாற் சேர்த்திடில் உய்வேன்” என உரைக்கின்றார். “தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே” (முதுகுன்று) என அடியார் முறையிடுவரெனத் திருஞான சம்பந்தர் கூறுவது காண்க.
இதனால், பிழை பொறுத்தருளி அடியார் கூட்டத்தில் சேர்த்தருள்க என முறையிடுமாறாம். (6)
|