197.

    பத்தி கொண்டவருட் பரவிய ஒளியாம்
        பரஞ்சுடர் நின்னடி பணியும்
    புத்தி கொள்ளலர்பால் எளியனேன் புகுதல்
        பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    நித்திய வடியர் தம்முடன் கூட்ட
        நினைந்திடி லுய்குவ னரசே
    சத்தி செங்கரத்தில் தரித்திடு மமுதே
        தணிகை வாழ் சரவண பவனே.

உரை:

     சத்திவேலைச் சிவந்த கையில் ஏந்திடும் அமுதமே, தணிகைச் சரவணபவனே, பத்தியுடைய பெருமக்கள் உள்ளத்தில் பரந்து ஒளி செய்யும் பரஞ்சுடராகிய உன்னுடைய திருவடியைப் பணிந்தேத்தும் ஞானம் இல்லாதவரிடம் சென்று ஒன்று வேண்டி நிற்கும் சிறுமைத் துன்பத்தை எளியனாகிய யான் பொறுக்கமாட்டேன்; நாளும் பரவுதல் நீங்காத அடியார் கூட்டத்தில் என்னைச் சேர்க்கத் திருவுள்ளம் கொள்வாயாயின், அருளரசே, நான் உய்ந்து போவேன், எ. று.

     சத்தியாகிய உமாதேவி யளித்த வேற்படையைக் கையில் உடையனாதல் பற்றிச் “சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே” என்று போற்றுகின்றார். வேற்படை மறவனாயினும் அமுதம் போல் அருள் செய்வதால் “அமுதே” என்று கூறுகின்றார். பத்தி பண்ணும் நன்மக்கள் மனத்தில் மேலான ஞானவொளி பரவுமாறு தோன்றப் “பத்தி கொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர்” என்று பரவுகின்றார். முருகன் திருவடி பணியும் நல்லறி வில்லாதவர்களை, “அடி பணியும் புத்தி கொள்ளலர்” எனவும், அவரது சார்பு தீமை பயக்கும் என்பது கருதி, “எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன்” எனவும் புகல்கின்றார். நித்திய அடியார் - எந்நாளும் திருவடி பரவுதலை நீங்காதவர்; என்னும் அன்புடைய அடிமைத் தன்மை மாறாதவர் எனவுமாம். அவரது நினைவு முழுதும் முருகன் திருவடிக் கன்பு செய்வதிலேயே ஒன்றியிருத்தலால் அவர் கூட்டமே உய்தி தருவது என உரைக்கின்றார்.

     இதனால் பத்தியில்லாத தீயவர்பால் சென்று சேரும் பான்மை எனக் கெய்தலாகாது என முறையிட்டவாறாம்.

     (7)