198.

    நீற்றணி விளங்கு மவர்க்கருள் புரியும்
        நின்னடிக் கமலங்கள் நினைந்தே
    போற்றி டாதவர்பாற் பொய்யனேன் புகுதல்
        பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஆற்றல் கொள் நின்பொன் னடியருக் கடிய
        னாச்செயி லுய்குவன் அமுதே
    சாற்றிடும் பெருமைக் களவிலா தாங்கும்
        தணிகை வாழ் சரவண பவனே.

உரை:

     சான்றோரால் எடுத்தோதப்படும் பெருமை எல்லை யில்லாமல் பெருகிச் சிறக்கும் தணிகைச் சரவணப் பெருமானே, திருநீற்றுப் பூச்சினால் அழகுடைய பெரியவர்களுக்கு நல்லருள் புரியும் நின்னுடைய திருவடித் தாமரைகளைச் சிந்தித்து வழிபடாதவர்களிடம் ஒன்று வேண்டி எய்தும் துன்பத்தைப் பொறுக்க முடியாதவனாகின்றேன்; ஆதலால் ஆற்றல் மிக்க நின்னுடைய திருவடியை மனத்திற் கொண்டுள்ள அடியார்களுக்கு அடியவனாகச் செய்குவாயாயின் வேண்டுவன பெற்று உய்தி பெறுவேன். எ. று.

     முருகன் பெருமையின் அளவிறந்த தன்மையை ஓத வல்லவராதலின், சான்றோர் என்பது வருவிக்கப்பட்டது. பற்றி நின்ற பாவம் நீறு பட்டழியப் பரிவுடன் பூசப்படுவது பற்றி “நீற்றணி விளங்குமவர்” என்று சிறப்பிக்கின்றார். திருவடிச் சிந்தனை யில்லாதவர் தீது அடைவதால் “நின்னடிக் கமலங்கள் நினைந்து போற்றிடாதவர்” எனப் பொதுப்பட மொழிகின்றார். பொய்யாக ஒன்று வேண்டினும் மறைத்து மனம் புண்படுத்துவர் என்பார், “பொய்யனேன்” எனப் புகல்கின்றார். யாது வேண்டினும் மறாது அளிக்க வல்ல பெருமக்கள் என்றற்கு, “ஆற்றல் கொள் நின் பொன்னடியர்” எனவும், அவர்கட்கு ஆட்பட் டடிமைப் பணி புரிதல் பேரின்பமா மென்பார், “அடியனாச் செயின் உய்குவேன்” எனவும், அந்நிலையில் நீயும் அருள் அமுதம் பொழிவாய் என்பாராய், “அமுதே” எனவும் அன்பு மிக வுரைக்கின்றார். அன்பு ஆற்றல் மிக்க தென்று மணிவாசகப் பெருமான், “ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” (சதகம்) எனக் கூறுவது காண்க.

     இதனால் ஆற்றல் மிக்க அடியவர்க்கு அடியனாச் செய்க என வேண்டியவாறாம்

     (8)