199. பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயு நினது
பாத தாமரைகளுக் கன்பு
புரிந்திடாதவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடு மன்ப ரிடமுறி லுய்வேன்
திருவுள மறிகிலன் தேனே
சரிந்திடுங் கத்தோர்க் கரியநற் புகழ்கொள்
தணிகை வாழ் சரவண பவனே.
உரை: நிலையின்றித் திரியும் மனமுடையவர்க்கு உணர்தற்கரிய நல்ல புகழ் கொண்ட தணிகைச் சரவண பவனே, அன்பு செய்யும் நன் மனமுடைய பெருமக்களுக்குத் திருவருள் நல்கும் திருவடித் தாமரைகளில் அன்பில்லாதவரிடம் அடைந்து எளிமையுடன் ஒன்று வேண்டிச் சென்றெய்தும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவனாகின்றேன்; நின்னருளிலறிந்து பரவும் மெய்யன்பர்பாற் சென்றால் வேண்டிய தெய்தி இன்புறுவேன்; நினது திருவுள்ளக் குறிப்பு யாதோ, அறியேன், எ. று.
சரிதல் - நிலை குலைந்து வீழ்தல். மனத்தின்கண் உறுதியின்றி நிலையிழந்து சாய்பவரைச் “சரிந்திடும் கருத்தோர்” என்பர். கருத்தோர் - கருத்தையுடையவர். அவர்கட்கு மனவொருமையும் உணர்வின்கட் கூர்மையும் இல்லாமை தோன்றச் “சரிந்திடும் கருத்தோர்க் கரிய நற்புகழ் கொள் தணிகை வாழ் சரவண பவன்” எனப் போற்றுகின்றார். பரிதல் - அன்பு செய்தல். அன்புடையார் வேண்டும் நல்லருளை மிக நல்குவது தோன்ற, “அருள் செயும் நினது பாத தாமரை” எனப் புகழ்கின்றார். முருகன்பால் அன்பில்லாத பொல்லாதவரிடம் மெல்லிய மொழியும் எளிய தன்மையும் கொண்டு சென்று ஏமாற்ற மெய்திய திறத்தை, “அன்பு புரிந்திடாதவர் பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்” எனக் கூறுகின்றார். முருகனுடைய திருவருணலமும் அதனை அப்பெருமான் வரையாது வழங்கும் திறமும் நன்கறிந்தவரைத் “தெரிந்திடும் அன்பர்” என்றும், இடமறிந்து இரப்பதும், இரந்தது பெறுவதும் இறைவன் திருவருட் குறிப்பின என்பது புலனாதலின், “திருவுளம் அறிகிலன்” என்றும் இயம்புகின்றார். “சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும்” (சிவபுரா) பெருமானாதலால், “தேனே” எனச் சிறப்பிக்கின்றார்.
இதனால், தக்காரைச் சென்றிரப்பதும் திருவருட் குறிப்பு என்று அறிவுறுத்தவாறாம். (9)
|