20. உழலுற்ற வுழவுமுத லுறுதொழி லியற்றிமலம்
ஒத்தபல பொருளீட்டி வீண்
உறுவயிறு நிறைய வெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்து நாளும்
விழலுற்ற வாழ்க்கையை விரும்பினே னையவிவ்
வெய்யவுடல் பொய் யென்கிலேன்
வெளிமயக் கோமாய விடமயக்கோ வெனது
விதி மயக்கோ வறிகிலேன்
கழலுற்ற நின்றுணைக் கான்மலர் வணங்கிநின்
கருணையை விழைந்து கொண்டெம்
களைகணே யீராறு கண்கொண்ட வென்றனிரு
கண்ணே யெனப் புகழ்கிலேன்
தழைவுற்ற சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தழைத்தல் மிக்க சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலை யிடமாகக் கொண்டு சிறக்கும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சைவமணியாய்த் திகழ்பவனே, ஆறுமுகம் கொண்ட தெய்வமணியே, உழைப்பு மிக்க உழவு முதலாகிய பெரிய தொழில்கள் செய்து மலம் திரண்டு குவிவது போலப் பலவாய பொருளைத் தேடிக் குவித்து வீணாகப் பெரிய வயிறு நிறைய வெண்மையான சோற்றைப் பெய்து இவ்வுடம்பை ஒதி மரம் போல் நாளும் வளர்த்து, வீழ்ந்து படுதலையுடைய வாழ்க்கையை விரும்பி யொழுகினேன்; ஐயனே, வெய்தாய இவ்வுடம்பைப் பொய்யென எண்ணிற்றிலேன்; இதற்குக் காரணம், வெளித் தோற்ற மயக்கமோ, பிறவியாகிய விட மயக்கமோ, எனது விதி செய்யும் மயக்கமோ, என்னால் அறிய முடியவில்லை; அதனால் கழலணிந்த நின்னுடைய இரண்டு திருவடியாகிய மலர்களை வணங்கி நின் திருவருளை விரும்பிப் பெற்று எம்முடைய களைகணே, பன்னிரண்டு கண் கொண்ட என் இரண்டாகிய கண்ணே, என்று புகழ்கின்றேனில்லை; என் மயக் கொழித்து அருள் புரிக, எ. று.
கல்விப் பெருக்காலும் செல்வமிகு வாணிகத்தாலும் நாளும் வளம் சிறப்பது கண்டு, “தழைவுற்ற சென்னை” என்று சிறப்பிக்கின்றார். உழல்-உழைப்பு. ஏனைத் தொழில்கட்கு முதலாய் உழைப்புமிக்க தொழில் என்பது பற்றி, “உழலுற்ற உழவு” என்றும், ஏனை உடைக்கும் உறையுட்கும் மருந்துக்கும் பிற வாய்ப்புகட்கும் வேண்டிய தொழில் வகைகளும் உளவாதலின், “உறு தொழில்” எனத் தொகுத்துரைத்து, அவற்றால் பொருள் ஈட்டும் செயலை, “மலம் ஒத்த பலபொருள் ஈட்டி” எனவுரைக்கின்றார். மலம் நாளும் குவிவது போலப் பொருளும் சேர்ந்து குவிகிற தென்பார், “மலம் ஒத்த பலபொருள் ஈட்டி” என்று கூறுகின்றார். பின்னும் இருந்து உழைத்தற் பொருட்டு உண்ண வேண்டுதலின், “வீணுறு வயிறு நிறைய வெண் சோறடைத்து” என விளம்புகிறார். உண்டதனைத்தையும் மலமாய்க் கழிப்பது பற்றி, “வீணுறு வயிறு” என்கின்றார். மலக் கழிவால் மெலிவும், கழியா விடின் நோயும் எய்துவித்தலால் வயிற்றை “வீண் வயிறு” எனப் பழிக்கின்றார். பருத்து உயர்ந்து வளரினும் ஒதி மரம் உள்வலி யில்லாமை போல உடலும் எளிதில் வீழ்ந்தொழிவதால், “ஒதிபோல் நாளும் வளர்த்து” என்றும், நிலையா வியல்பின தென்றற்கு “விழலுற்ற வாழ்க்கை” என்றும், நிலையென நம்பினமை புலப்பட “விரும்பினேன்” என்றும் இசைக்கின்றார். உயிர்நீங்குங் காறும் வெம்மை யறாத தாகலின் “இவ்வெய்ய வுடல்” என்று சுட்டிக் கூறுகிறார். பொய் - நிலையில்லாதது. பொய்யான தாயினும் உடலை யாவரும் மெய்யென்றே வழங்குதலால், “பொய் என்கிலேன்” என்று புகல்கின்றார். பொய்யை மெய்யென நினையாமைக்கும் மொழியாமைக்கும் காரணமுளதாகல் வேண்டுமென நோக்கின், வெளியுலகைப் பார்ப்பவர்க்கு எப்போதும் மக்களினம் காணப்படுதலின், “வெளி மயக்கோ” என்றும், மக்கட் பிறப்புக்கே விடம் போல் மயக்கும் தன்மை யுண்டாதலால், “விட மயக்கோ” என்றும் கூறுகின்றார். “மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டருள் செய்” (திருமலை. 28) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. விதி - செய்த வினை. தனக்குரிய பயனைச் செய்தானைப் பற்றி நுகர்வித்தல்ல தொழியாமை விதி யாதலின், விதி யெனப்பட்டது. வினைப் பயனை நுகர்விக்கும் முதல்வன், அதற்கேற்பச் செய்தான் அறிவை மயக்குதலால் “விதி மயக்கோ” என்று கூறுகிறார். இம்மயக்க வகையால் நின்னைப் புகழ்வ தொழிந்தேன் என வருந்துகின்றா ராதலால், வணங்கும் திறத்தை, “கழலுற்ற நின் துணைக் கான்மலர் வணங்கி நின் கருணையை விழைந்து கொண்டு எம் களைகணே ஈராறுகண் கொண்ட என்றன் இரு கண்ணே எனப் புகழ்கிலேன்” என விரித்துரைக்கின்றார். கழல் - காலில் அணியும் வீர தண்டை.
இதனால் பொய்யான உடலை மெய்யென்று நினைந்து, காரணம் பல்வகை மயக்க மென்றுணர்ந்து அதனால் முருகப் பெருமான் திருவடியை வணங்கிப் புகழா தொழிந்தமை தெரிவித்தவாறாம். (20)
|