200. எண்ணுறு மவர்கட் கருளு நின்னடியை
ஏத்திடா தழிதரும் செல்வப்
புண்ணுறு மவர்பால் எளியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண்ணுறு மணியாம் நின்னடியவர்பால்
கலந்திடி லுய்குவன் கரும்பே
தண்ணுறுங் கருணைத் தனிப்பெருங் கடலே
தணிகை வாழ் சரவண பவனே.
உரை: குளிர்ந்த கருணை நிறைந்த ஒப்பற்ற பெரிய கடலாகிய தணிகைச் சரவணப் பெருமானே, கரும்பாய் இனிப்பவனே, இடையறவின்றி நின்னையே நினைந்தொழுகும் நன்மக்கட்கு அருள் வழங்கும் நின்னுடைய திருவடியைப் போற்றாமல் அழிவு நெறியில் செல்லும் செல்வமாகிய புண்ணுற்ற மக்களிடத்தில் எளியனாய்ச் சென்று ஒன்று வேண்டியெய்தும் துன்பத்தைப் பொறுக்க மாட்டேனாதலால், கண்ணில் விளங்கும் மணி போன்ற நின்னுடைய அடியார் பக்கம் சென்று கலந்து கொள்வேனாயின், நலமனைத்தும் பெற்று உய்தி பெறுவேன், காண்க, எ. று.
கருணை குளிர்ச்சி மயமாதலால், “தண்ணுறும் கருணை” என்றும், அதற்கு நிகர் அதுவேயாய் அளப்பரிய பெருமை யுடையதாகலின், “தனிப் பெருங் கடல்” என்றும் பாராட்டுகின்றார். இடையறவு படாத முருகனையே எப்போதும் சிந்தித்த வண்ணமிருக்கும் பெருமக்களை, “எண்ணுறு மவர்கள்” எனவும், அவ்வாறின்றி, முருகப் பெருமானை வழிபடும் செயலைக் கைவிட்டுப் பொன்னும் பொருளுமே பலபட நினைந்து நெஞ்சு புண்பட்டிருக்கும் செல்வர்களை, “ஏத்திடாது செல்வப் புண்ணுறு மவர்” எனவும், அவர்களுடைய பொன்னும் பொருளும் வாழ்வும் யாவும் நிலையின்றித் தேய்ந்து அழிவன வாதலால் “அழிதரும் செல்வப் புண்ணுறு மவர்” எனவும் இசைக்கின்றார். திருவருள் ஞானமருளி விளக்கம் செய்வது பற்றிக் “கண்ணுறு மணியாம் நின்னடியவர்” என்கின்றார். “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” (சிவபுரா) எனச் சான்றோர் அறிவிப்பது அறிக.
இதனால், செல்வமே நினைந்துறும் செல்வர்பாற் செல்லாமை யருளுக என முறையிட்டவாறாம். (10)
|