13. வேட்கை
விண்ணப்பம்
இவ்வேட்கை விண்ணப்பம் அந்தாதித்
தொடையில் உள்ளத்து விருப்பத்தை எடுத்துரைக்கும்
பத்துப் பாட்டுக்களாலாகியது. இதன்கண், வள்ளற் பெருமான்
மனத்தில் தோய்ந்த துயர நினைவுகளை அழகுற
எடுத்துரைப்பதும், தணிகை முருகன் திருமேனி காண்டற் கெழும்
விருப்பம் கூறுவதும், வஞ்சர் கூட்டத்தில் பட்டுத்
துன்புறுவதும் காணப்படுகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
201. மன்னே யென்ற னுயிர்க்குயிரே
மணியே தணிகை மலைமருந்தே
அன்னே என்னை யாட்கொண்ட
அரசே தணிகை யையாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே
புனித வருளே பூரணமே
என்னே யெளியேன் துயருழத்தல்
எண்ணி யிரங்கா திருப்பதுவே.
உரை: தணிகை மலையில் உள்ள மருந்தே, அருளரசே, என் உயிர்க் குயிராயவனே, மாணிக்க மணியே, எனக்குத் தாயே, என்னை ஆட்கொண்ட கோமானே, தலைவனே, பிறவி வெம்மையைத் தணிக்கும் ஐயனே, பொன் போன்றவனே, ஞானப் பேரொளியுடையவனே, தூய திருவருளே, நிறை பொருளே, எளியனாகிய யான் துயர் அடைந்து வருந்துவதைத் திருவுள்ளத்தில் நினைந்து இரங்காமல் இருந்தருளுவது என்னையோ? கூறுக, எ. று.
நிலைத்த அருளரசன் என்றற்கு “மன்னே” என்றும், உயிர்க்குயிராய் நன்னெறி காட்டுதலால் “உயிர்க்குயிரே” என்றும் கூறுகின்றார். மருந்து - பிறவி நோய் போக்கும் ஞான மருந்து. தன்னை நினைப்பித்துத் தன் திருவடிக்குப் பணி புரியும் அன்பனாக்கியது நினைந்து உரைத்தலால், “என்னை ஆட்கொண்ட அரசே” எனவும், பிறவிச் சூழலில் எய்தும் துன்ப வெப்பத்தைத் தணிப்பது பற்றித் “தணிகை ஐயா” எனவும் புகழ்கின்றார். முருகனை ஞானமூர்த்தி யென்பவாகலின், “ஞானப் பொங்கொளியே” என்றும், மெய்ம்மை யருள் வாழ்வளிப்பவனாதலால், “புனித அருளே” என்றும், குறைவிலாது நிறை பரம்பொருளாதல் விளங்கப் “பூரணமே” என்றும் உரைக்கின்றார். துயர் நீக்கத்திலுள்ள பெரு விருப்பத்தைப் புலப்படுத்தற்கு, “எளியேன் துயருழத்தல் எண்ணியிரங்கா திருப்பது என்னே” என மொழிகின்றார்.
இதனால் உலகியல் துன்பம் துடைத்தற்குற்ற விருப்ப மிகுதி புலப்படுத்தவாறு. (1)
|