205. செஞ்சொற் சுவையே மெய்ஞ்ஞானச்
செல்வப் பெருக்கே தெள்ளமுதே
விஞ்சைப் புலவர் புகழ்தணிகை
விளக்கே துளக்கில் வேலோனே
வெஞ்சொற் புகலும் வஞ்சகர்பால்
மேவி நின்றாண் மலர்மறந்தே
பஞ்சில் தமியேன் படும்பாட்டைப்
பார்த்து மருட்கண் பார்த்திலையே.
உரை: வித்தையில் வல்ல புலவர்கள் புகழும் தணிகைப் பதியில் எழுந்தருளும் ஞான விளக்கமே, செஞ்சொற் கவியின்பமே, மெய்யுணர்வாகிய செல்வ மிகுதியுடையவனே, தெளிந்த அமுதம் போல்பவனே, போரில் மடங்குதல் இல்லாத வேற்படையை யுடையவனே, வன் சொற்களைப் பேசும் வஞ்சகரை யடைந்து நின்னுடைய திருவடியை நினையா தொழிந்தமையால் பஞ்சி போல் பெருந்துன்பமுறும் தமியனாகிய என் மேல் இரக்க முற்று அருட்கண் செலுத்தியருள்க, எ. று.
விஞ்சை - வித்தை. விஞ்சைப் புலவர், விஞ்சை நாட்டு அறிஞர்கள் என்றலும் ஒன்று. ஞான வொளி யுடைமையால், “விளக்கே” என்றும், திரிபொருள் பயவாமல் செவ்விய இயற்சொல் என்றற்குச் “செஞ்சொல்” என்றும் கூறுகின்றார். அறிவுடைமை சிறந்த செல்வமாயினும், பரஞானத்தால் எய்தும் மெய்ம்மைச் செல்வமே தக்கதாதலால் அதனை, “மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே” எனவும், அதனினும் தெளிவும் பெருமையும் உடையது பிறிது இல்லாமையால், “தெள்ளமுதே” எனவும் இயம்புகின்றார். கேட்டற்கு வருத்தம் உண்டு பண்ணும் வெவ்விய சொற்களை, “வெஞ்சொல்” என்பர், மனத்தில் வஞ்சமுடையவரிடத்தில் இச்சொற்கள் பெரிதும் காணப்படுவது பற்றி, “வெஞ்சொல் புகலும் வஞ்சகர்” என்றும், அவரோடு இணங்குவோர் வஞ்ச மனத்தாராய்த் தீய நினைவுற்றுக் கெடுவராதலால், “வஞ்சகர்பால் மேவி நின்தாள் மறந்தேன்” என்றும், அக்குற்றத்தால் எய்திய துன்பத்தைப் “பஞ்சில் தமியேன் படும்பாடு” என்றும், அது திருவருட் பார்வையா லன்றித் தீரா தென்பார், “அருட்கண் பார்த்திலையே” என்றும் இயம்புகின்றார். மிக்கு வருத்தும் துன்பத்தைப் “பஞ்சி படும் பாடு” என்பது உலக வழக்கு.
இதனால் வஞ்சகர் கூட்டத்தை யடைந்தமையால் கெட்டுத் துன்பறும் நிலையை உரைத்தவாறாம். (5)
|