206. பார்க்கின் றிலையே பன்னிருகண்
படைத்து மெளியேன் பாடனைத்தும்
தீர்க்கின் றிலையே என்னேயான்
செய்வேன் சிறியேன் சீமானே
போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும்
பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத்
தேவே மயிலூர் சேவகனே.
உரை: சிறப்புடைய மலை எனப்படும் நல்ல வளம் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளும் தெய்வமே, மயிலேறும் காவற் கடவுளே, அசுரரது போர்ப்படை யென்னும் மலையையும் கிரவுஞ்சம் என்னும் மலையையும் தூள் பட அழித்த வேற்படையை ஏந்தும் புண்ணிய மூர்த்தியே, பன்னிரண்டு கண்களையுடையனாகியும் எளியவனாகிய என்னைப் பார்க்கின்றாயில்லை; எனது துன்பமனைத்தையும் போக்குகின்றாயில்லை; சீமானே, சிறுமையுடைய யான் என்ன செய்வேன், கூறுக, எ. று.
சீரும் செல்வமும் ஒப்ப வுடைய தாதலால் தணிகை மலையைச் “சீர்க்குன்றெனும் நல்வளத் தணிகை” எனப் புகழ்கின்றார். சீமான்-செல்வ வகை பலவும் உடையவன். எஞ்சுதலின்றி எல்லாவற்றையும் ஒருங்கே இனிது நோக்கும் கண் படைத்த காவலன் என்றற்குப் “பன்னிருகண் படைத்தவன்” எனவும், அக்கண்களால் தன் துன்ப நிலையைப் பார்க்கவில்லை என்பாராய்ப், “பார்க்கின்றிலையே” பன்னிரு கண் படைத்தும்” எனவும், தமக்குற்ற துன்பங்களைனைத்தையும் நீக்காமல் இருப்பதற்கு வருந்தி, “எளியேன் பாடனைத்தும் தீர்க்கின்றிலையே” எனவும், முருகன் திருவருளாலல்லது துன்பம் துடைக்கும் வழி யாதும் இல்லாமை யெண்ணி, “என்னே யான் செய்வேன்” எனவும் இயம்புகின்றார். அடுக்கி வரும் துன்பங்களைப் பொறுத்தாற்றும் வன்மை யில்லாமை வெளிப்படச் “சிறியேன்” என வுரைக்கின்றார். அசுரர் படைத்திரளைப் “போர்க் குன்றம்” என உருவகம் செய்கின்றார். பாடு - துன்பம். சேவகன்- காவலன்.
இதனால், படுகின்ற பாடுகளைப் பன்னிரண்டு கண்களாலும் பார்த்தருளி நீக்கி யுதவுக என முறையிட்டவாறாம். (6)
|