207. சேவற் கொடிகொள் குணக்குன்றே
சிந்தா மணியே யாவர்கட்கும்
காவற் பதியே தணிகைவளர்
கரும்பே கனியே கற்பகமே
மூவர்க் கிறையே வேயீன்ற
முத்த னளித்த முத்தேநல்
தேவர்க் கருணின் சேவடிக்கே
விழைந்தேன் யாதும் தெரியேனே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் கரும்பு போல்பவனே, கனியே, கற்பகம் போல்பவனே, தேவர் மக்களாகிய யாவருக்கும் காவலனாக விளங்கும் தலைவனே, சேவற் கோழி எழுதிய கொடி யுயர்த்த குணக்குன்றமே, சிந்தாமணியே, தேவ தேவர்களாகிய மூவர்க்கும் இறைவனே, மூங்கிலிடத்தே தோன்றிய முத்தனாகிய சிவபெருமான் பெற்ற முத்துப் போல்பவனே, நலமிக்க தேவர்கட்கு அருணிழல் செய்யும் திருவடிப் பேற்றையே யான் விரும்புகின்றேன்; அதனை எய்தும் திறம் அறிகிலேன், அறிவருளுக, எ. று.
பிரமன், திருமால், அரன் ஆகிய மூவர்க்கும் தலையாய பரம் பொருளாதலின், “மூவர்க்கிறையே” என்றும் மூங்கிலிடத்தே தோன்றினான் என்று புராணம் கூறலால், “வேய் ஈன்ற முத்தன்” எனச் சிவனைக் கூறி அவன்பால் தோன்றினமைபற்றி முருகனை, “முத்தன் அளித்த முத்தே” என்றும் கூறுகின்றார். கோழிச் சேவல் எழுதிய கொடியுடைமை பற்றிச் “சேவற் கொடியேன்” எனவுரைக்கின்றார். “கோழி யோங்கிய வென்றடு விறற் கொடி வாழிய பெரிது” (முருகு) என்று சான்றோர் கூறுகின்றார்கள். சிந்தாமணி- கெடாத மாமணி; கற்பக நாட்டு மணிகளில் ஒன்றுமாம். எவ்வுயிரையும் காக்கும் தலைவனாதல்பற்றி “யாவர்கட்கும் காவற் பதி” என்று போற்றுகின்றார். நற்பண்புடைய தேவர்கட்கு இடுக்கண் வந்தபோது, அவர்களது துன்பம் போக்கி அருள் செய்தது நினைந்து, “நல்தேவர்க்கருள் நின் சேவடிக்கே விழைந்தேன்” எனவும், முருகன் சேவடியைப் பராவுதலன்றிச் செயல் வேறின்மையால், “யாதும் தெரியேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால் சேவடி பராவுதலன்றி வேறு செயலறியாமை தெரிவித்தவாறு. (7)
|