208. தெரியே னுனது திருப்புகழைத்
தேவே யுன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன்
பாடேன் புகழைப் பரவசமாய்த்
தரியேன் தணிகை தனைக்காணேன்
சாகேன் நோகேன் கும்பிக்கே
யுரியே னந்தோ வெதுகொண்டிங்
குய்கேன் யாது செய்கேனே.
உரை: தேவ தேவனே, உனது திருப்புகழ் நலத்தை அறியேன்; உன்னுடைய சிவந்த திருவடிகட்கு அன்பு செய்யேன்; பணிவதும் மகிழ்வால் கூத்தாடுவதும் இல்லேன்; உன் திருப்புகழைப் பாடுவதில்லேன்; பரவசப்பட்டு உன் திருவடியைத் தலையில் சூடிக் கொள்வதில்லை; உனது தணிகை மலையையும் காண்பதில்லேன்; சாவதும் மனம் நோவதுமின்றி வயிற்றுக்கே யுரியனாய் உறைகின்றேன்; யான் எதனைத் துணைக்கொண்டு உய்குவேன்; எதனைத் தான் செய்குவேன்; ஐயோ, என் நிலை இரங்கத் தக்கது, காண், எ. று.
புகழ்கள் பலவாதலின் இதனை முதற்கண் கூறுவது, இதனை இடையில் வைத்துப் பரவுவது, இதனை இறுதியில் வற்புறுத்துவ தெனப் பகுத்துணர மாட்டாமை தோன்றத் “தெரியேன் உனது திருப்புகழை” என்றும், செம்மையாய திருவருள் ஞானம் நல்குவதாகலின் அதன்கட் பரிவு கொண்டு போற்றுதல் செயத் தக்கதாக அதனைச் செய்யாமை தோன்ற, “உன்றன் சேவடிக்கே பரியேன்” என்றும் கூறுகின்றார். பத்தி மேலிட்டுப் பணிவதும் கூத்தாடுவதும் தெரிந்த புகழ்களை எடுத்துப் பாடுவதும் செய்யாமைக்கு வருந்துகிறார். தன்வச மிழந்து முருகன்பால் உண்டாய அன்பு வசமாகி நிற்பது மெய்யன்பர் இயல்பு; அது தானும் செய்யவில்லை என் பார், “பரவசமாய்த் தரியேன்” எனவும், தணிகை மலையைக் கண்ட விடத்து அதன் முடி மேல் எழுந்தருளும் முருகப் பெருமான் நினைவு தோன்றி இன்புறுத்துவது எண்ணேனாகின்றேன் என்பார், “தணிகை தனைக் காணேன்” எனவும், இம்மண்ணுலகில் வீணுக்கு உண்டுடுத்து இருப்பது பயனில் செயலாதலால், நான் சாவது நன்றாக அதுவும் செய்யேன் என்பாராய்ச் “சாகேன் நோகேன் கும்பிக்கே உரியேன்” எனவும் இயம்புகிறார். உய்திப் பேற்றுக்குத் துணை செய்வதும், அது குறித்துச் செய்யலாவதும் ஒன்றும் அறிய முடியாமை விளங்க, “எது கொண்டிங்குய்கேன் யாது செய்கேன்” எனவும் வருந்துகிறார். கும்பி - வயிறு.
இதனால் தம்பால் பத்தி யில்லாமைக்கு நொந்து கொண்டவாறாம். (8)
|