21. வானமெங் கேயமுத பானமெங்கே யமரர்
வாழ்க்கை யபிமான மெங்கே
மாட்சி யெங்கே யவர்கள் சூழ்ச்சி யெங்கே தேவ
மன்னனர சாட்சி யெங்கே
ஞான மெங்கே முனிவர் மோன மெங்கே யந்த
நான்முகன் செய்கை யெங்கே
நாரணன் காத்தலை நடத்த லெங்கே மறை
நவின்றிடு மொழுக்க மெங்கே
ஈனமங்கே செய்த தாருகனை ஆயிர
விலக்கமுறு சிங்க முகனை
எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலை யெனில்
தானமிங் கேர்சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: இடத்தால் அழகுற அமைந்த சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலை இடமாகக் கொண்ட கந்த வேட் பெருமானே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியே, சண்முகங்களை யுடைய தெய்வ மணியே, இழிசெயல் செய்த தாருகனாகிய அசுரனையும், ஆயிரம் தலைகளையுடைய சிங்கமுகாசுரனையும், நினைத்தற்கரிய வலி படைத்த சூரவன்மனையும் மறக்கருணை செய்து பணி கொள்ளா திருப்பாயேல், வானுலகமோ, அவ்விடத்தவர் கொள்ளும் அமுதபானமோ, வானவரது வாழ்க்கையோ, அவர்களது தேவரெனும் அபிமானமோ, மாட்சிமையோ, அவர்களது ஆராய்ச்சியோ, தேவர் அரசனான இந்திரனுடைய அரசாட்சியோ ஒன்றும் இராது மறைந்து போயிருக்கும்; ஞானமோ, முனிவர்களின் மோனமோ, அந்த நான்முகங்களையுடைய பிரம தேவனுடைய படைப்புத் தொழிலோ, திருமாலின் காத்தற்றொழிலோ நடப்பது எங்ஙனமாம்; வேதங்கள் உரைக்கும் ஒழுக்கமோ நடைபெறுவதில்லையாம். எ. று.
வடபால் திருவொற்றியூரையும், மேற்பால் திருவலிதாயத்தையும், நடுவில் எழுமூரையும், கிழக்கில் மயிலாப்பூரையும், தென்கிழக்கில் திருவான்மியூரையும், எல்லையாகக் கொண்டு நடுவமைந்த இடத்தைத் தனக்குத் தானமாகக் கொண்டமை பற்றிச் சென்னையைத் “தானமிங்கேர் சென்னை” என்று சிறப்பிக்கின்றார். அகத்தியர் முதலிய முனிவர்களை வழி மயக்கி அலைத்தமை பற்றி “ஈன மங்கே செய்த தாருகன்” எனவும், ஆயிரம் தலைகொண்டு ஆயிர இலக்கம் படைமறவரை யுடையனாதலால் சிங்கமுகனை, “ஆயிர இலக்கமுறு சிங்கமுகன்” எனவும், தேவர் மூவரையும் இந்திரன் முதலிய இறையவர்களையும் அஞ்சி யோடுவித்த ஆற்றலுடைய னென்றற்கு, “எண்ணரிய திறல்பெற்ற சூரன்” எனவும் இயம்புகின்றார். போர் முடிவில் நல்லறிவு தந்து தன் தெய்வத் தன்மை யுணர்ந்து தன்திருவடி வணங்குவித்த அருணலத்தை வியந்து, “மறக்கருணை யீந்து பணி கொண்டிலையேல்” என வுரைக்கின்றார். தாருகன், சிங்கமுகன், சூரவன்மன் ஆகியோர் வலி யழிதற்கு முன் வான் உலகம் பாழ் பட்டது; தேவர் அமுத பானம் பெறாது சிறைப்பட்டனர்; அமரர் வினை செய்தலின்றிப் போக நுகர்ச்சியிலே ஆழ்ந்து கிடந்த வாழ்வு சீர்குலைந்தது; வாழ்தல் வேண்டிக் கடல் கடைந்த பயன் வீணாயிற்று; சாவா மருந்துண்டிருந்த மாண்பு சிதறிற்று; அவர்களுடைய அறிவாராய்ச்சி தவறு பட்டது; இந்திரன் ஆட்சி ஈடழிந்தது; அது பற்றியே “வானமெங்கே அமுதபான மெங்கே” என்பது முதலாய சொற்றொடர்களால் உணர்த்துகின்றார். ஞானிகளும் முனிவர்களும் சூரவன்மன் ஏவின செய்யும் பணி மக்களானமையின், “ஞான மெங்கே முனிவர் மோன மெங்கே” என்றும், படைத்தளிக்கும் தேவர்களான பிரமனும் நாரணனும் அடிமைகளானமை புலப்பட, “அந்த நான்முகன் செய்கையும் நாரணனது காத்தற் றொழிலும் என்ன பயனைச் செய்தன” என்று வினவுகின்றார். உலகியல் ஒழுக்கம் கூறும் மறைகள் ஓதுதல் ஒழிந்தமை தோன்ற “மறை நவின்றிடும் ஒழுக்க மெங்கே” என இயம்புகின்றார். மறைகள் ஒழுக்கம் கூறுவன என்பதைச் சேக்கிழார் பெருமான், “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது” (திருஞான. பு : 820) என வுரைப்பது காண்க.
இதனால், முருகப் பெருமான் கருணையால்தான் வானுலகும் மண்ணுலகும் வாழ்கின்றன என்று தெரிவித்தவாறாம். (21)
|