210.

    எளியே னினது சேவடியாம்
        இன்ப நறவை யெண்ணியெண்ணி
    அளியே னெஞ்சம் சற்றேனும்
        அன்பொன் றில்லே னதுசிறிதும்
    ஒளியே னெந்தா யென்னுள்ளத்
        தொளித்தே யெவையு முணர்கின்றாய்
    வளியே முதலாய் நின்றருளும்
        மணியே தணிகை வாழ்மன்னே.

உரை:

     காற்று முதலிய பூதங்கட்கு முதற்பொருளாய் நின்ற மணியே, தணிகையில் எழுந்தருளும் அருளரசே, எளியனாகிய யான் நின்னுடைய திருவடியாகிய இன்பத் தேனை நினைந்து நினைந்து அளிக்கத் தக்க என் நெஞ்சில் சிறிதும் அன்பில்லாதவனாக வுள்ளேன்; இதனைச் சிறிது போதும் மறைக்க மாட்டேன்; ஏனெனில் என்னுள்ளத்தின்கண் மறைந்திருந்தே எதனையும் அறிந்து கொள்ளுகிறாய், எ. று.

     காற்று, நீர், நிலம் முதலாகிய பூதங்களனைத்திற்கும் முதல்வனாதலின், “வளியே முதலாய் நின்றருளும் மணியே” என்று கூறுகின்றார். நிலம் நீர் காற்று என்பது முறையாயினும் செய்யுளாகலின் முறை மாறிற்று. மாணிக்க மணிபோலும் திருமேனி யுடையனாதலை வற்புறுத்தற்கு, “மணியே” என மொழிகின்றார். எளிமைப் பண்புடைமையால் திருவடியை நினைந்து மகிழ்ந்தேனே யன்றி அதனை யடைதற்கெனர் செயற்பாலதாகிய அன்பைச் செய்யா தொழிந்தேன் என்பாராய், “எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணி யெண்ணி நெஞ்சம் சற்றேனும் அன்பொன்றில்லேன்” எனவும், “புண்வைத்து மூடார் பொதிந்து” என்பது போல என் மனத்தின்கண் அன்பில்லாமையை ஒளிவு மறைவின்றி எடுத்து மொழிகிறேன் என்பாராய், “அது சிறிதும் ஒளியே னெந்தாய்” எனவும் உரைக்கின்றார். அவரவர் நெஞ்சின்கண் நிகழும் எண்ணங்கள் அனைத்தையும் உள்ளிருந்தறியும் ஒட்ப முடையனாதல் பற்றி, “ஒளித்தே யெவையும் உணர்கின்றாய்” என ஓதுகின்றார். “உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந்தறிதி யென்றுவெள்கினேன்” (தனி. நேரிசை) என நாவுக்கரசர் நவில்வது காண்க.

     இதனால், திருவடியாம் தேனைப் பன்முறையும் எண்ணியது போல அதன்பால் அன்பு செய்தேனில்லை என முறையிட்டவாறாம்.

     (10)